×

2வது பதக்கம் உறுதி செய்தார் லவ்லினா

மகளிர் குத்துச்சண்டை வெல்ட்டர் வெய்ட் பிரிவு (64-69 கிலோ) காலிறுதியில்  சீன தைபே வீராங்னையை வீழ்த்திய லவ்லினா போர்கோகைன்,  அரையிறுதிக்கு முன்னேறி இந்தியாவுக்கு 2வது பதக்கத்தை உறுதி செய்தார்.ஒலிம்பிக்கில்  நேற்று நடந்த   குத்துச்சண்டை போட்டியில் இந்தியா தோல்வியுடன் தான் தொடங்கியது.    மகளிர் 60 கிலோ எடை பிரிவு முதல் சுற்றில் இந்திய வீராங்கனை சிம்ரன்ஜித் கவுர், தாய்லாந்து வீராங்கனை  சுடாபோர்ன் சீசன்டியை எதிர்கொண்டார்.  அதில் சிம்ரன்ஜித் 0-5 என்ற  புள்ளி கணக்கில் தோல்வி அடைந்தார்.

அடுத்த அரைமணி நேரத்தில் மற்றொரு இந்திய வீராங்கனை  லவ்லினா  69 கிலோ எடை பிரிவு காலிறுதியில் களமிறங்கினார்.   சீன தைபே வீராங்கனை நியன் சின் சென் சவாலை எதிர்கொண்ட அவர் இந்தப் போட்டியில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினாலே  பதக்கம் உறுதி என்பதால் அனைவரின் எதிர்பார்ப்பும் லவ்லினா மீதே இருந்தது. அதற்கேற்ப  3 சுற்றுகளிலும் தனது ‘லவ்லி பஞ்ச்’களால் சீன தைபே வீராங்கனையை நிலைகுலைய வைத்த லவ்லினா 4-1 என்ற புள்ளிக் கணக்கில் வென்று  அரையிறுதிக்கு முன்னேறினார்.

இந்த வெற்றியின் மூலம் லவ்லினா  நடப்பு ஒலிம்பிக்சில் இந்தியாவுக்கு 2வது பதக்கத்தை உறுதி செய்துள்ளார். பாக்சிங் அரையிறுதியில் தோற்கும் 2 வீரர், வீராங்கனைகளுக்கும் வெண்கலப் பதக்கம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. லவ்லினா ஆக. 4ம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதியில்  துருக்கி வீராங்கனை  புசெனஸ் சுர்மனெலியை எதிர்கொள்கிறார்.

Tags : Lovelina , Olympic, medal confirmation,Lovelina
× RELATED வெள்ளி பதக்கம் வென்றார் லவ்லினா