×

சில்லுனு ஒரு அழகு!

நன்றி குங்குமம் தோழி

மழைக்காலம் குளிரால் வசீகரிக்கிறது. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாமே என இழுத்துப் போர்த்தி பெண்ணின் போர்க்குணத்துக்கு தாலாட்டுப் பாடி சவால் விடுகிறது. மண், இலை, கொடி என இயற்கையை தன் துளித் துளி அன்பால் வளர்க்கும் மழையும், பெண்ணின் அழகை மெருகூட்டுவதுடன் சின்னச் சின்ன சிரமங்களால் வாட்டுகிறது. மழைக்காலத்திலும் பெண்ணழகைப் பாதுகாப்பதற்கான ஆலோசனைகள் வழங்குகிறார் கிரீன் டிரெண்ட்ஸ் யுனிசெக்ஸ் ஸ்டைல் அண்டு ஹேர் சலூன் நிறுவனத்தின் அழகுக்கலை வல்லுநர் சுமதி.

உடலை சில்லென மென்மையாக வருடும் காற்றுக்கு சூடான காபி சுவை சேர்க்கும். குளிர்காலம் பிடிக்காதவர் யார் இருக்க முடியும். இந்தக் காலகட்டத்தில் வீசும் குளிர் காற்று சில உடல் நலக் குறைபாடுகளுடன் சருமப் பிரச்னைகளையும் உண்டாக்குகிறது. உலர்ந்த சருமம் ஈரப்பதத்துக்காக ஏங்குகிறது. போதிய ஈரப்பதம் இல்லாத போது சருமமும் உலர்ந்து பொலிவிழக்கிறது.

‘‘வெயில் காலத்தில் குளிர்ந்த நீரில் குளிக்கும் பலர் குளிர் காலத்தில் சுடுதண்ணீர்க் குளியலுக்கு மாறி விடுகின்றனர். இதனால் மேலும் சருமம் வறண்டு உயிரோட்டமின்றி சொரசொரப்பாக மாறி விடுகிறது. உலர்ந்த சருமத்தைக் கண்டு கொள்ளாமல் விடுவது நமது அழகைக் கண்டிப்பாக பாதிக்கும். இக்காலகட்டத்தில் சருமம் உலர்ந்து முதிர்ச்சியான தோற்றம் தரும். சருமம் கருப்பாக மாறவும் வாய்ப்புள்ளது. சருமத்தில் உள்ள செல்கள் அதிகளவில் இறப்பதால் இப்பிரச்னை ஏற்படுகிறது.

அளவுக்கு அதிகமான எண்ணெய் பிசுபிசுப்பு சருமம் உள்ளவர்களுக்கு இந்தக் காலகட்டத்தில் சருமத்தில் எண்ணெய் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் சருமப் பிரச்னைகள் கூடும். இதற்கெல்லாம் என்னதான் தீர்வு என்று யோசிக்கும் பெண்களுக்கு வாய்த்திருக்கும் ஒரு மேஜிக் தான் ஃபேஷியல். குளிர்காலம் ஏற்படுத்தும் அத்தனை பிரச்னைகளுக்குமான தீர்வு இதில் உள்ளது.

ஃபேஷியல் செய்து கொள்ளும் போது சருமம் ஆழமாகத் தூய்மை செய்யப்படுகிறது. இறந்த செல்களை அகற்றுவதோடு சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்க வைக்கிறது. சருமத்தை இயற்கையாகப் புதுப்பிக்கச் செய்கிறது. முகத்தில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி ஃபிரஷ்ஷாக வைக்கிறது. ஃபேஷியலில் செல் உதிர்ப்புப் பொருட்களான எக்ஸ்போலியன்ட்ஸ், மாஸ்குகள், பீல்ஸ் ஆகியவை இறந்த சரும செல்களை அகற்றுவதற்கு உதவுகின்றன. ரத்த
ஓட்டத்தை மேலும் சிறப்பாக ஊக்கப்படுத்துகிறது. சருமத்தை மிருதுவாக மாற்றிப் புத்துயிரூட்டுகிறது.

ஃபேஷியலில் நிறைய வகைகள் இருந்தாலும் ஆழமாக சுத்தப்படுத்தி இறந்த செல்களை அகற்றும் தன்மை உடையதே இந்தக் காலகட்டத்துக்கு ஏற்றது. சருமத்துவாரங்களில் உள்ள அடைப்புக்களை நீக்குவதோடு இல்லாமல், ஈரப்பதத்தையும் தக்க வைக்கிறது. இந்தக் காலகட்டத்துக்கு பர்ஃபெக்ட் ஒயிட் ஆல்டைம் ஃபேஷியலை அனைவரும் விரும்புகின்றனர்.

கிவி பழத்தின் நன்மைத் தன்மைகளைச் செறிவாகக் கொண்டிருக்கும் 9 படிநிலை செயல்முறையானது ஆழமாகச் சருமத்தைத் தூய்மை செய்து, உதிர்வின் மூலம் இறந்த செல்களை அகற்றுகிறது. அத்துடன் ரிலாக்ஸ் செய்யும் மசாஜ் கிரீம் வழியாகச் சருமம் ஈரப்பதத்துடன் இருக்கச் செய்கிறது. இதனை அடுத்து டபுள் பீல் அப் மாஸ்க்கைப் பயன்படுத்துவது கூடுதல் ஈரப்பதத்தை சருமத்துக்கு வழங்குகிறது. இந்த ஃபேஷியலில் சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்றுவதோடு, பளிச்சென்ற, பட்டுப் போன்ற மென்மை அளிக்கிறது.’’

யாழ் ஸ்ரீதேவி

Tags : Chiplun ,
× RELATED பூஜைப் பொருட்கள் தயாரிப்பிலும் லாபம் பார்க்கலாம்!