3 மாதத்திற்கு பிறகு ஆந்திராவில் தியேட்டர்கள் திறப்பு

திருமலை: கொரோனா 2ம் அலை பரவலால் கடந்த 3 மாதங்களாக ஆந்திரா, தெலங்கானாவில் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டது. இதனிடையே தொற்று குறைந்து வரும் நிலையில், கடந்த ஜூலை 8ம்தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்களை இயக்கலாம் என ஆந்திர அரசு அனுமதி வழங்கியது. ஆனால் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டும் தியேட்டருக்கு வந்தால், மிகுந்த நஷ்டம் ஏற்படும் என கூறப்பட்டது. இதனால், தியேட்டர் உரிமையாளர்கள், திரைப்பட விநியோகஸ்தர் சங்கங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. கடந்த ஜூலை 8ம்தேதி தியேட்டர்கள் திறக்கப்படவில்லை.

இந்நிலையில் மீண்டும் நேற்று முதல் மாநிலம் முழுவதும் உள்ள தியேட்டர்களை திறக்கும்படி அரசு அனுமதி வழங்கியது. மேலும் 50 சதவீத பார்வையாளர்களுடன் முககவசம், சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது. அதன்படி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தியேட்டர்கள் நேற்று திறக்கப்பட்டது. தியேட்டர்கள் திறக்கப்பட்டதால் முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் பலர் ஆர்வத்துடன் படம் பார்க்க தியேட்டர்களுக்கு வந்தனர். அதேபோல் தெலங்கானாவில் 100 சதவீத பார்வையாளர்களுடன் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தியேட்டர்கள் இயங்க தெலங்கானா அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Related Stories: