சிவகாசியில் 10 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல்

சிவகாசி: சிவகாசியில் 10 டன் ரேஷன் அரிசியை லாரியுடன் வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர். சிவகாசியில் பைபாஸ் சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் அருகே லோடு ஏற்றிய நிலையில் லாரி ஒன்று நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் லாரி டிரைவரிடம் விசாரித்துள்ளனர். லாரி டிரைவர் முன்னுக்குபின் முரணாக பதில் கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அந்த பகுதி மக்கள் போலீசாருக்கும், வருவாய் துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.  

சம்பவ இடத்திற்கு மாவட்ட ரேஷன் அரிசி தடுப்பு பிரிவு தாசில்தார் சங்கரபாண்டியன், ஆய்வாளர் விக்னேஷ், சிவகாசி டிஎஸ்பி பாபுபிரசாந்த் மற்றும் வருவாய்த்துறையினர் விரைந்து வந்து லாரியை சோதனை செய்தனர். அப்போது லாரி டிரைவர், கிளீனர் தப்பி ஓடி விட்டனர். சோதனையில், 200 மூடைகளில் 10 டன் ரேஷன் அரிசி இருப்பதும், சிவகாசி பகுதியிலுள்ள பல ரேஷன் கடைகளில் இருந்து வாங்கி வெளிமாநிலங்களுக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. லாரியுடன் ரேஷன் அரிசி மூடைகளை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய டிரைவர் மற்றும் கிளீனரை போலீசார் தேடி வருகின்றனர். சிவகாசியில் நேற்று இரவு நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>