விவசாயிகளுக்கான குறுகிய கால பயிர் கடன் அபராத வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும்: ஒன்றிய நிதியமைச்சருக்கு ராகுல் காந்தி கடிதம்

புதுடெல்லி: விவசாயிகளுக்கான குறுகிய கால பயிர் கடன் வழங்கியதில், அபராத வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஒன்றிய நிதியமைச்சருக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல்காந்தி, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பால், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் கடுமையான நிதி சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.

கொரோனா ஊரடங்கு, பொருட்களை சந்தை படுத்துவதில் சிக்கல்கள் போன்றவற்றால்  விவசாயிகளின் வருமானம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் எதிர்கால  பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. அதனால், உரிய நேரத்தில்  அவர்களால் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். கேரளாவில் உள்ள எனது தொகுதியான வயநாட்டில் ஏராளமான சிறு மற்றும் குறு விவசாயிகள் வாழ்கின்றனர். கடந்த 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் ஏற்பட்ட பெரும் பகுதி வெள்ளத்தால் கேரளா பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து விவசாயிகள் மீண்டு வரும் நிலையில், ​விவசாயிகளுக்கான குறுகிய கால பயிர் கடன்களை வட்டி விலக்கு திட்டத்தின் கீழ், வரும் டிசம்பர் 31ம் தேதி வரை பயிர் கடன்களை  திருப்பி செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும். அத்தகைய கடன்களுக்கான அனைத்து அபராத வட்டியிலிருந்தும் விலக்கு  அளிக்க வேண்டும்.

குறுகிய கால கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு கால அவகாசத்தை நீடிக்குமாறு வயநாடு விவசாயிகள் கோரியுள்ளனர்.

இதேபோல் நாடு முழுவதும் உள்ள பல கோடி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், குறுகிய கால பயிர்க் கடன்களை திருப்பி செலுத்துவதற்கான காலக்கெடுவை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும். அனைத்து அபராத வட்டியையும் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>