×

ஸ்டெர்லைட்டில் உற்பத்தி நிறுத்தம்: நீதிமன்றம் அளித்த அனுமதி நாளையுடன் முடிவும் நிலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நிறுத்தியது ஸ்டெர்லைட்..!

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்படுவதாக ஆலை நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவிய போது நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்குவதற்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. அதேநேரம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், ஆக்சிஜன் தயாரித்து வழங்குவதாக தமிழக அரசிடம் அனுமதி கோரியது. உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு தென்மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலையில் மூன்று மாத காலத்திற்கு ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், நடப்பு மாதத்துடன் (நாளையுடன்) அதற்கான அனுமதி முடிவடைகிறது. அதனால், ஆக்சிஜன் உற்பத்திக்கு மேலும் 6 மாத கால அவகாசம் கேட்டு வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இம்மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆலை நிர்வாகம் சார்பில், ஆக்சிஜன் உற்பத்திக்காக மேலும் 6 மாத கால அவகாசம் ஆலை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. அதற்கு தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘தமிழகத்தில் மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை.

அதனால், ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலைக்கான கால அவகாசத்தை நீடிக்க வேண்டிய அவசியமில்லை’ என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இம்மனு மீதான உத்தரவை ஒரு வாரத்தில் பிறப்பிப்பதாக கூறி ஒத்திவைத்தார். இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்படுவதாக ஆலை நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் எதிர்ப்பை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.


Tags : Sterlite , Sterlite suspends production: Sterlite suspends production as court clearance expires tomorrow
× RELATED ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவு,...