×

மதசார்பற்ற ஜனதா தளம் ஆதரவு ‘டுவிட்’ எதிரொலி; பாஜக மாஜி அமைச்சர் மகளை வளைக்கும் குமாரசாமி: கர்நாடக அரசியலில் அடுத்த பரபரப்பு

பெங்களூரு: மதசார்பற்ற ஜனதா தளம் குறித்த ஆதரவு டுவிட் எதிரொலியாக, தனது கட்சியில் பாஜக முன்னாள் அமைச்சரின் மகளையும், தாயையும் சேர்த்துக் கொள்வதாக கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா மாநிலத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்ற நிலையில், பாஜகவின் முன்னாள் ஒன்றிய அமைச்சர் அனந்த் குமாரின் மகள் விஜேதா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘ஏன் கர்நாடக அரசியல் சுவாரஸ்யமாக இருக்கிறது? எல்லாவற்றையும் எண்ணிக்கையின் அடிப்படையில் மதிப்பிட முடியாது.

மதசார்பற்ற ஜனதா தளம் (முன்னாள் முதல்வர் குமாரசாமியின் கட்சி) வலுவான அரசியல் சக்தியாக உள்ளது’ என்று தெரிவித்திருந்தார். இதற்கு உடனடியாக டுவிட்டரில் பதிலளித்த குமாரசாமி, ‘எனது கட்சி மற்றும் லட்சக்கணக்கான தொண்டர்கள் சார்பில் விஜேதாவுக்கு நன்றி கூறுகிறேன்’ என்று கூறினார். தொடர்ந்து அவர் கூறுகையில், ‘முன்னாள் மத்திய அமைச்சர் அனந்த் குமாரின் தாய் தேஜஸ்வினி, எங்கள் கட்சிக்கு வந்தால், நாங்கள் அவரை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்போம். பாஜக அவருக்கு முக்கியத்துவம் கொடுத்ததா? இல்லையா? என்று எனக்குத் தெரியாது.

அதேபோல், அனந்த் குமாரின் மகள் விஜேதாவும் எங்கள் கட்சிக்கு வந்தால், நாங்கள் அவரையும் ஆதரிப்போம்’ என்று அவர் கூறினார். மற்றொரு டுவிட்டில், ‘தாயும், மகளும் மதசார்பற்ற ஜனதா தளத்தில் சேர்வதற்காக அறிகுறி ஏதேனும் இருக்கிறதா?’ என்று ஒருவர் கேட்டதற்கு, ‘பார்ப்போம், வரும் நாட்களில் அரசியலில் சில மாற்றங்கள் வரும். பொறுமையாக நாம் காத்திருக்க வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக, ஒன்றிய அமைச்சராக இருந்த அனந்த் குமார் இறந்த பின்னர், அவரது மனைவி தேஜஸ்வினி பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டு கட்சிப் பணிகளில் ஈடுபட்டார்.

அவருக்கு கடந்த மக்களவை தேர்தலில் சீட் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு கட்சி தலைமை வாய்ப்பு வழங்கவில்லை. இதனால், பெங்களூரு தெற்கு தொகுதியில் உள்ள அனந்த் குமார் ஆதரவாளர்கள் பாஜக தலைமை மீது தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர். இந்த நிலையில், அனந்த் குமாரின் மகள் குமாரசாமியின் கட்சிக்கு ஆதரவாக கருத்துகளை கூறியது கர்நாடக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Janata Dal ,Kumaraswamy ,BJP ,Karnataka , Echoing the ‘tweet’ in support of the secular Janata Dal; Kumaraswamy bends daughter of former BJP minister: Next stir in Karnataka politics
× RELATED பெண்ணுக்கு மிரட்டல் பாஜ பிரமுகர் கைது