சிபிஐ, ஐடி, ரா, ஐபி... வரிசையில் ‘பெகாசஸ்’- ஒன்றிய அரசு மீது சிவசேனா கண்டனம்

மும்பை: நாட்டின் உயர்மட்ட விசாரணை, உளவு அமைப்புகளை போன்று பெகாசஸ் மாறும் என்று சிவசேனா கட்சி எச்சரித்துள்ளது. ‘பெகாசஸ்’ விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க முன்வராத ஒன்றிய அரசை, எதிர்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றன. இந்நிலையில், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சியின் ஆதரவு பத்திரிக்கையில், ‘பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி மதன் பி.லோகூர் தலைமையில் குழுவை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நியமித்ததை வரவேற்கிறோம்.

பிற மாநில முதல்வர்களும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் விழிப்புடன் இருக்க வேண்டும். அமைச்சர்கள், எதிர்க்கட்சிகள், நீதித்துறை, ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையை கண்காணிப்பது மிகவும் வெட்கமான விசயம். சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித் துறை, உளவு அமைப்புகளான ‘ஐபி’, ‘ரா’ போன்ற அமைப்புகளின் மற்றொரு கிளையாக பெகாசஸ் மாறும். இதனை மக்கள் விரைவில் பார்ப்பார்கள்.

இஸ்ரேலிய நிறுவனமான ​பெகாசஸ் போன்ற உளவு அமைப்புகள் நுழைந்தால், அது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மாறும். ஆனால், அதற்கு ஒன்றிய அரசு தேசிய புகலிடம் அளிப்பதாகத் தெரிகிறது. பெகாசஸ் விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் போன்ற நாடுகளும் விசாரணைகளை அறிவித்துள்ளன.ஆனால் ஒன்றிய அரசு இன்னும் இந்த விஷயத்தை தீவிரமாக கருதவில்லை. இதில் மர்மம் நீடிக்கிறது’ என்று தெரிவித்துள்ளது.

Related Stories:

>