அமைச்சருக்கு எதிராக அவதூறு பதிவு: அரசுப் பஸ் டிரைவர் சஸ்பெண்ட்

மும்பை: மகாராஷ்டிராவில் அமைச்சர் மற்றும் அரசுக்கு எதிராக அவதூறு கருத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்ட அரசுப் பஸ் டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியின் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் அனில் பரப் மற்றும் மாநில அரசுக்கு எதிராக அரசுப் போக்குவரத்து துறையில் பணியாற்றும் டிரைவர் பிரவீன் லாடி என்பவர், அமைச்சர் மற்றும் அரசுக்கு எதிராக சமூக வலை தளங்களில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்தார். குறிப்பாக, ‘மகா விகாஸ் அகாதி கூட்டணி அரசானது, தினமும் ரூ. 100 கோடி மாமூல் வசூலிக்கும் அரசு’ என்று தெரிவித்திருந்தார்.

அரசுப் பணியில் இருப்பவர், அரசுக்கு எதிராக அவதூறு கருத்துகளை பரப்பியதாக கூறி, மாநில அரசுப் போக்குவரத்து துறையின் யவத்மால் பணிமனையின் போக்குவரத்து ஆய்வாளர் எஸ்.எஸ்.ரத்தோட் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி உத்தரவிடப்பட்டது. அதன்படி, குற்றம்சாட்டப்பட்ட டிரைவர் பிரவீன் லாடி, மாநில போக்குவரத்து அமைச்சர் அனில் பரப் மற்றும் அரசுக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துகளை வெளியிட்டது உறுதிசெய்யப்பட்டது. மேலும், அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

அதையடுத்து அரசு போக்குவரத்து துறை வெளியிட்ட உத்தரவில், ‘அரசுக்கு எதிராக அவதூறு செய்தியை அனுப்பியது மிகவும் கண்டிக்கத்தக்க விசயமாகும். விசாரணைக்கு எவ்வித தடையும் ஏற்படாமல் இருப்பதற்காக, விசாரணை முடியும் வரை அவர் இடைநீக்கம் செய்யப்படுகிறார்‘ என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>