'தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் மாவட்டங்களில் தேவையான நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது' - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் தொற்று அதிகரித்து வரும் மாவட்டங்களில் தேவையான நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று நேற்றைய பாதிப்பு 1,859ஆக உள்ளது. 33 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 100க்கும் கீழ் குறைந்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, கோவை, ஈரோடு, தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தினசரி 100க்கும் மேல் உள்ளது. ஒரு சில மாவட்டங்களில் சிறிய அளவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது.

இது பொதுமக்கள் மற்றும் சுகாதார துறை அதிகாரிகளிடம் சிறிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து சென்னையில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர்; தமிழ்நாட்டில் தொற்று அதிகரித்து வரும் மாவட்டங்களில் தேவையான நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொற்று எந்த பகுதியில் இருந்து பரவி அதிகரித்து வருகிறது என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. கேரளத்தில் வீட்டில் சிகிச்சை பெறுவதால் தான் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு அதில் வருபவர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது. கேரளாவில் இருந்து வருவோருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தொற்று பாதித்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சிகிச்சை தரும் நிலை உள்ளது. தமிழ்நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி விரைவுப்படுத்தப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்களை பாதிக்கும் மஞ்சள் காமாலைக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது. தொற்று குறைந்துள்ளது என்று அஜாக்கிரதையாக இல்லாமல் கட்டாயம் முகக்கவசம், சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்; தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில் ஓபிசி பிரிவினருக்கு 27% ஒதுக்கீடு மிகவும் பயன் தரும். ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி விவகாரத்தில் கால நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார் எனவும் கூறினார்.

Related Stories: