மாமல்லபுரம் அருகே கார் விபத்தில் படுகாயம் அடைந்த நடிகை யாஷிகா ஐசியூவிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றம்..!

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே  கார் விபத்தில் படுகாயம் அடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி  உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் இளம் நடிகை யாஷிகா ஆனந்த்.  இவரது நெருங்கிய தோழி ஐதராபாத்தை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் வள்ளி ஷெட்டி பவானி (26).  இவர்களது ஆண் நண்பர்களான அமீர், சையது ஆகியோருடன் கடந்த 24ம் தேதி ஒரேகாரில் இசிஆர் வழியாக புதுச்சேரி சென்றுள்ளனர். பின்னர்,  அன்று இரவு 11.30 மணி அளவில் இசிஆர்  வழியாக மீண்டும் சென்னை நோக்கி திரும்பி சென்று கொண்டிருந்தனர்.  காரை யாஷிகா ஆனந்த் ஓட்டி வந்துள்ளார்.

மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு கடல்நீரை குடிநீராக்கும் ஆலை அருகே சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள சென்டர் மீடியனில் மோதி  கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  இதில், யாஷிகாவின் தோழி வள்ளி ஷெட்டி பவானிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.  அவரை மீட்டு பூஞ்சேரி அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அழைத்து செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். யாஷிகா ஆனந்த்துக்கு கால் மற்றும் இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, வலியில் துடிதுடித்துக் கொண்டிருந்தார். இதுகுறித்து, தகவலறிந்த மாமல்லபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த யாஷிகா மற்றும் லேசான காயம் அடைந்த  ஆண் நண்பர்கள் இரண்டு பேரையும் மீட்டு சென்னை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இந்நிலையில் யாஷிகாவுக்கு கால் மற்றும் இடுப்பு பகுதியில் அறுவை சிகிச்சை நடந்தது. கடந்த ஐந்து நாட்களான தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த யாஷிகா நேற்று சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். தற்போது, அவர் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கிடையில்,  மாமல்லபுரம் போலீசார் வாகனத்தை வேகமாக ஓட்டியது, கவனக்குறைவாக செயல்பட்டது, உயிரிழப்பை ஏற்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் யாஷிகா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில்,  மாமல்லபுரம் போலீசார் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று யாஷிகா மற்றும் இரண்டு ஆண் நண்பர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்தினர். இதில், சீட் பெல்ட் அணியாததே  உயிரிழப்பிற்கு காரணம் என முதற்கட்ட விசாரனையில் தெரிய வந்துள்ளது. யாஷிகா உடல் சரியாகி வீட்டிற்கு சென்றதும் அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து  செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: