செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தமிழக அரசுக்கு குத்தகைக்கு வழங்க மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தல்

டெல்லி: செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழ்நாடு அரசிற்கு குத்தகைக்கு தர வேண்டும் என திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மக்களவையில் கோரிக்கை வைத்த அவர் செங்கல்பட்டில் உள்ள ஹெச்எல்எல் பயோடெக் லிமிடெட் அதிநவீன தடுப்பூசி வளாகத்தில் கடந்த 9 ஆண்டுகளில் ஒரு தடுப்பூசி கூட உற்பத்தி செய்யப்படவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது என்றார்.

உயிர்க்காக்கும் தடுப்பூசிகளை குறைந்த செலவில் இங்கு உற்பத்தி செய்ய வேண்டியது முதன்மையானது என வலியுறுத்திய அவர் இந்தியாவில் தற்போது கொரோனா தடுப்பூசி உற்பத்தி போதுமானதாக இல்லை என்பதையும் குறிப்பிட்டார். தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க தமிழ்நாடு அரசிடம் உற்பத்தி மையத்தை குத்தகைக்கு வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்திருப்பதை நினைவுகூர்ந்த அவர் அந்த கோரிக்கையை ஏற்று ஆலையை தமிழ்நாடு அரசிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதேபோல குன்னூரில் உள்ள நிறுவனத்திலும் தடுப்பூசி உற்பத்தியை மீண்டும் தொடங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

Related Stories: