போலி மது ஆலை கண்டுபிடிப்பு: ரூ.50 லட்சம் மது பாட்டில்கள் பறிமுதல்..!

காரைக்கால்: காரைக்கால் அருகே  கண்டுபிடிக்கப்பட்ட போலி மது ஆலையில் ரூ.50 லட்சம் போலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் மீன் வாகனத்தில் ரூ.50லட்சம் எரிசாராயம் சிக்கியது. காரைக்கால் தெற்கு மண்டல எஸ்பி வீரவல்லபன் மேற்பார்வையில் போலீசார் காரைக்கால் அடுத்த பச்சூர் தில்லைநகர் பகுதியில் பூட்டியிருந்த ஒரு குடோனில் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த குடோனில் ஒரு சரக்கு வாகனம், எரிசாராயம் மற்றும் போலி மதுபான பாட்டில்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் அட்டை பெட்டிகளில் மதுபானம் தயாரிப்பதற்காக ஒரு லட்சம் பாட்டில்கள், மூடிகள், சீல்கள், மதுபான பெயர் பொறித்த ஸ்டிக்கர்கள், வெளி மாநிலங்களுக்கு கடத்தக்கூடிய சரக்கு வாகனத்திற்கான போலி நம்பர் பிளேட்டுகளும் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அங்கிருந்த மதுபான பாட்டில்கள், தயாரிக்க பயன்படுத்திய இயந்திரங்கள், 1000 லிட்டர் எரிசாராயம், 280 லிட்டர் போலி மதுபானம் அடைத்து வைக்கப்பட்ட பாட்டில்கள், சரக்கு வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மொத்தம் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அந்த குடோன் நெடுங்காட்டை சேர்ந்த அப்பு என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து போலி மதுபான தொழிற்சாலை நடத்தியது தொடர்பாக தலைமறைவாக உள்ள உரிமையாளர் அப்பு மற்றும் வாசிம், மஸ்தான் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் காரைக்கால் அடுத்த அம்மாள் சத்திரம் அக்கரை கொல்லை தெரு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்கள் ஏற்றி செல்லும் வாகனத்தில் நடத்திய அதிரடி சோதனையில், மீன் பதப்படுத்தும் பெட்டிகளில் ரூ.50 லட்சம் மதிப்பிலான 35லிட்டர் கொள்ளளவு கொண்ட 128 கேன்களில் எரிசாராயம் அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததும், போலி நம்பர் பிளேட்டுகளும் இருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தை சேர்ந்த தமிழரசன் என்பவருக்கு சொந்தமான வாகனம் என தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வாகன உரிமையாளர் தமிழரசன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>