ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை: அரையிறுதிக்கு முன்னேறி லவ்லினா அசத்தல்..! இந்தியாவுக்கு 2வது பதக்கம் உறுதி

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை 69 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன், அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார். இதன் மூலம் நடப்பு ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான 2வது பதக்கத்தை அவர் உறுதி செய்துள்ளார். இன்று நடந்த 69 கிலோ எடைப்பிரிவு மகளிர் குத்துச்சண்டை காலிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா, சீன தைபேவை சேர்ந்த நியென் சின் சென்னுடன் மோதினார். மொத்தம் நடந்த 5 ரவுண்ட்களில் லவ்லினா, 4-1 என்ற கணக்கில் நியன் சின் சென்னை வீழ்த்தி வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். முதல் ரவுண்டில் 30-27 என்ற கணக்கிலும், 2வது ரவுண்டில் 29-28 என்ற கணக்கிலும் லவ்லினா கைப்பற்றினார். 3வது ரவுண்டை 29-28 என்ற கணக்கில் நியென் சின் சென் கைப்பற்றினார்.

ஆனால் 4வது மற்றும் 5வது ரவுண்டை 30-27 என்ற கணக்கில் கைப்பற்றி, இப்போட்டியில் லவ்லினா வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் இந்தியாவுக்கான மற்றொரு ஒலிம்பிக் பதக்கத்தை லவ்லினா உறுதி செய்துள்ளார். குத்துச்சண்டையில் அரையிறுதியில் தோல்வியடைந்தாலும் வெண்கலம் உறுதி என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பளு தூக்குதல் பிரிவில் நடப்பு ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை மீரா பாய், வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். டோக்கியோவில் வரும் ஆக.4ம் தேதி 69 கிலோ எடைப்பிரிவு மகளிர் குத்துச்சண்டை அரையிறுதிப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் துருக்கியை சேர்ந்த புசெனஸ் சர்மெநெலியுடன், லவ்லினா மோதவுள்ளார்.இன்று நடந்த மற்றொரு காலிறுதியில் புசெனஸ், உக்ரேன் வீராங்கனை அன்னா லிசென்கோவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி, அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

Related Stories: