கரும்பு பயிரில் இலைச்சுருட்டல் நோய் தடுக்கும் தொழில்நுட்பம்-வேளாண்துறை விளக்கம்

திருச்செங்கோடு : திருச்செங்கோடு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரும்பு பயிரில் ‘பொக்கோ போயிங்’ என்ற இலைச்சுருட்டல் அழுகல் நோய் பாதிப்பை ஏற்படுத்தி மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது. இந்த நோயானது பூஞ்சைகள் மூலம் ஏற்படுகிறது. விதைக்கரணை மூலமும், காற்று -மழைநீர் மற்றும் பாசன நீர் வழியாகவும் பரவும் தன்மை கொண்டது. கரும்பு பயிரில் 3 முதல் 7 மாதங்கள் வரையில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்நோயானது இலைச்சுருட்டல் புழு நிலை மற்றும் குருத்து அழுகல் நிலை என இரண்டு வகையில் கரும்பு பயிரில் தென்படுகிறது.

ஆரம்ப நிலையில் நோய் தாக்கிய இலைகளின் அடிப்பாகம் தண்டுடன் ஒட்டிய பகுதி வெளிர்மஞ்சள் நிறமாக மாறி மொத்தமாக காணப்படும். இலையின் மேல் பகுதி சுருண்டு முறுக்கிய நிலையில் தென்படும். குருத்து பகுதி பாதிக்கப்பட்டு உருமாறி சுருண்டு காணப்படும். சில நேரங்களில் இலைகள் முறிந்து குருத்துகள் கீழே தொங்கிய நிலையில் இருக்கும்.

குருத்து முழுவதும் அழுகி காய்ந்து கருப்பு நிறமாக மாறிவிடும். இதனை கட்டுப்படுத்த நோய் தாக்காத விதை கரணையை பயன்படுத்த வேண்டும். சீரான முறையில் நீர் பாய்ச்ச வேண்டும். மேலும், இந்நோயை கட்டுப்படுத்த பெவிஸ்டின் 2 கிராம்(அ) டைத்தேன் ஆ-45 4 கிராம்(அ) ஸ்பிரிண்ட் 3 கிராம் டில்ட் 1 மில்லி ஆகிய பூஞ்சாணக்கொல்லி மருந்துகளில் ஏதாவது ஒரு மருந்தை  குருத்துப்பகுதி நன்றாக படும்படி விசைத்தெளிப்பான் அல்லது டிராக்டர் மூலம் இயங்கும் தெளிப்பானை கொண்டு 15 நாள் இடைவெளியில் 2 முதல் 3 முறை பாதிக்கப்பட்ட பகுதியுடன் அருகிலுள்ள தூர்களின் மீதும் நன்றாக நனையும்படி தெளிக்க வேண்டும். மேலும், விபரங்களுக்கு வட்டார வேளாண் அலுவலகத்தை அணுகலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>