நீதிபதி மர்ம மரணம் - ஜார்க்கண்ட் அரசு அறிக்கை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

தன்பாத்: ஜார்கண்ட் மாநில தன்பாத் மாவட்ட முதன்மை நீதிபதி மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து ஜார்க்கண்ட் அரசு அறிக்கை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி ஜீப் மோதி உயிரிழந்த விவகாரம் குறித்து தானாக வழக்குப்பதிவு செய்த உச்சநீதிமன்றம் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சீர் செய்ய ஜார்க்கண்ட் அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.  நீதிபதி உத்தம் ஆனந்த் மீது ஜீப்பை ஏற்றி கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தானாக உச்சநீதிமன்றம் வழக்குப்பதிவு செய்தது.

சமூக வலைத்தளத்தில் வெளியான இந்த வீடியோ காட்சியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பல்வேறு தரப்பில் இருந்தும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதங்கள் எழுதப்பட்டது. இதனையடுத்து உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்துகிறது. ஜார்கண்ட் மாநில தலைமை செயலாளர், காவல்துறை தலைவர் ஆகியோர் விரிவான அறிக்கையை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சீர்செய்ய வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாடுமுழுவதும் மற்ற இடங்களிலும் நீதிபதிகள் மீதான தாக்குதல், அவர்கள் மீது போலியான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு நீதித்துறையின் மாண்பிற்கு பாதுகாப்பற்ற சூழல் இருக்கக்கூடிய நிலையில் அடுத்த 2 வாரத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் நோட்டீஸ் அனுப்புவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். நீதித்துறையை சேர்ந்தவர்களது பாதுகாப்பு சம்மந்தமாக தாமாக முன்வந்து இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தற்போது பதிவு செய்துள்ளார்.

Related Stories: