2020ல் அதிமுக ஆட்சியில் நடந்த கூத்து இல்லாத கண்மாயில் தடுப்பணை கட்டப்பட்டதா?....இயக்குநர் ஆய்வு செய்ய உத்தரவு

மதுரை:  சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே நடராஜபுரத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பனங்குடி கிராமத்திலுள்ள வீரையன் கண்மாயில் ரூ.4.6 லட்சத்தில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளதாக வெப்சைட்டில் தகவல் உள்ளது. இதற்கு 14.10.2020ல் அனுமதிக்கப்பட்டதாகவும், 16 பேர் மூலம் 3 மாதத்தில் பணி முடிந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. ஆவணங்களின்படி வீரையன் கண்மாய் என எதுவும் எங்கள் கிராமத்தில் இல்லை. போலி ஆவணங்கள் தயார் செய்து முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி எஸ்.ஆனந்தி ஆகியோர், ‘‘பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது. எனவே, இது குறித்து ஊரகவளர்ச்சித் துறை இயக்குனர் ஆய்வு செய்து சிவகங்கை கலெக்டரிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த அறிக்கை அடிப்படையில், கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தனர்.

Related Stories: