தமிழகத்துக்கு 12 கோடி தேவைப்படும் நிலையில் 2 கோடி தடுப்பூசி மட்டுமே ஒன்றிய அரசு விநியோகம்: 98% டோஸ் செலுத்தி தமிழக அரசு சாதனை

திருச்சி: தமிழகத்தில் உள்ள 6 கோடி மக்களுக்கு தடுப்பூசி போட மொத்தம் 12 கோடி டோஸ் தேவைப்படும் நிலையில், ஒன்றிய அரசு இதுவரை 2 கோடி டோஸ் மட்டுமே தமிழகத்திற்கு வழங்கி உள்ளது. இதில் 98 சதவீத டோஸ்களை பொதுமக்களுக்கு செலுத்தி தமிழக அரசு சாதனை படைத்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் 2வது அலை குறைந்து கொண்டே வருகிறது. தினசரி தொற்று 2 ஆயிரத்திற்கும் கீழாகிவிட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் தடுப்பூசிகளை வீணாக்குவது அதிகமாக இருந்தது. இதன்பிறகு தமிழக முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின், தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்த உத்தரவிட்டார். மேலும் வீணாவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதன்படி, தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஒன்றிய அரசு அளித்த தடுப்பூசிகளைவிட 5 லட்சம் டோஸ் அதிகமாக செலுத்தி தமிழ்நாடு அரசு சாதனை படைத்துள்ளது.

இதைதவிர்த்து கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. மேலும் சி.எஸ்.ஆர். நிதியின் மூலம் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி போடும் திட்டத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மொத்தம் 6,06,15,923 பேர் உள்ளனர். இவர்களுக்கு தடுப்பூசி போட 12,12,31,846 டோஸ் தடுப்பூசி தேவைப்படும் நிலையில், ஒன்றிய அரசு 2 கோடி தடுப்பூசிகளை மட்டுமே தற்போது வரை வழங்கி உள்ளது.

கடந்த 26ம் தேதி வரை ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு 2 கோடியே 1 லட்சத்து 66 ஆயிரத்து 610 டோஸ் தடுப்பூசிகளை வழங்கி உள்ளது. இதில் கோவிஷீல்டு 1 கோடியே 73 லட்சத்து 19 ஆயிரத்து 510. கோவாக்சின் 28 லட்சத்து 46 ஆயிரத்து 850. இதில் 1 கோடியே 97 லட்சத்து 98 ஆயிரத்து 121 பேருக்கு தடுப்பூசி செலுத்தி தமிழ்நாடு அரசு சாதனை படைத்துள்ளது. இதன்படி, சுகாதார பணியாளர்களில் 58 சதவீதத்தினர் இரண்டு தவணை தடுப்பூசிகளையும், 95 சதவீதத்தினர் முதல் தவணை தடுப்பூசியையும் செலுத்தி கொண்டுள்ளனர். முன்கள பணியாளர்களில் 37 சதவீதத்தினர் இரண்டு தவணை தடுப்பூசிகளையும், 79 சதவீதத்தினர் முதல் தவணை தடுப்பூசியையும் செலுத்தி கொண்டுள்ளனர்.

18 முதல் 44 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 3.61 கோடி பேர் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்களாக கண்டறியப்பட்ட நிலையில், 19 சதவீதத்தினர் முதல் தவணை தடுப்பூசியும், 3.27 லட்சம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியையும் செலுத்தி கொண்டுள்ளனர். இதேபோல் 45 முதல் 59 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் 1.27 கோடி பேர் தகுதியானவர்களாக கண்டறியப்பட்டத்தில் 38 சதவீதத்தினர் முதல் தவணை தடுப்பூசியும், 13 சதவீத்தினர் இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளனர். 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை பொறுத்தவரை 91.8 லட்சம் பேர் தகுதியானவர்களாக கண்டறியப்பட்டு 29 சதவீதத்தினர் முதல் தவணையும், 11 சதவீதத்தினர் இரண்டாம் தவணையும் செலுத்திக் கொண்டுள்ளனர். ஒன்றிய அரசு போதிய கோவாக்சின் தடுப்பூசிகளை வழங்காத காரணத்தால் தமிழகத்தில் கோவாக்சின் தட்டுப்பாடு நிலவு வருகிறது. பலர் 2வது டோஸ் போட காத்திருக்கின்றனர்.

Related Stories: