பேரவைத் தலைவராக இருந்தவருக்கு வரலாறு தெரியாதது வருத்தமளிக்கிறது: ஜெயக்குமாருக்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலடி

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்தில் கலைஞர் உருவப்படம்  திறப்பதில்  மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால். விழா கொண்டாட வேண்டும் என்பதற்காக வரலாற்றை  மாற்றக்கூடாது என்று முன்னாள் பேரவைத் தலைவர் ஜெயக்குமார் ஒரு கருத்தைத்  தெரிவித்துள்ளார்.  பேரவைத் தலைவராக இருந்தவருக்கு வரலாறு தெரியாதது  வருத்தமளிப்பதாக நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். இது குறித்து அமைச்சர் எ.வ.வேலு கூறும்போது: ஜெயக்குமார் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பேரவைத் தலைவராக இருந்தவர், சட்டப் பேரவைக்கும், சட்டமன்றப் பேரவைக்கும் உள்ள வேறுபாடு அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

1937ம் ஆண்டில் மதராஸ் மாகாணச் சட்டமன்றம், சட்டமன்ற மேலவையாகவும், வாக்குரிமை பெற்ற வயது வந்த அனைத்து மக்களாலும் நேரிடையாகத் தெரிந்தெடுக்கப்பட்டவர்களைக் கொண்ட சட்டப்பேரவையாகவும் செயல்படும் முறை பிறந்தது என்பதன் அடிப்படையில் 1989ம் ஆண்டில் சட்டப்பேரவையின் பொன்விழா கொண்டாடப்பட்டது. 1997ம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்றப்  பவளவிழா மற்றும் சட்டமன்றப் பேரவை வைரவிழா தலைவர் கலைஞர் அவர்களால் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. விழா கொண்டாடும் நோக்கத்திற்காக வரலாற்றை மாற்றி எழுதக்கூடாது ஜெயக்குமார் கூறியிருக்கிறார். எதற்காக மாற்றி எழுத வேண்டும்? நூற்றாண்டு விழாவின் முக்கியத்துவத்தை உணர்ந்த காரணத்தால்தான் இந்தியக் குடியரசுத் தலைவரும், தமிழ்நாடு ஆளுநர் அவர்களும் பங்கு பெறுவதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்.   

ஜெயக்குமார் சொன்னதுபோல, மக்களை முட்டாளாக்கும் முயற்சியில் நாங்கள் செயல்படவில்லை, அனைவரையும் அறிவாளிகளாக்கும் முயற்சியில்தான் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. ஜெயக்குமார் அமைச்சராக இருந்தபோதும் ஒருவருக்கும் புரியாத கருத்தைப் பேரவையில் சொல்லிவிட்டு உட்கார்ந்து விடுவார். அப்போதெல்லாம் நாங்கள் அவருடைய பேச்சைக் காமெடியாகத்தான் எடுத்துக்கொள்வோம். சட்டமன்றப் பேரவைத் தலைவராகப் பணியாற்றிய இவரைப் பதவியேற்ற ஓராண்டிலேயே அம்மையார் ஜெயலலிதா பதவியை விட்டு நீக்கியது ஏன் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இந்த அறிக்கையின் மூலம் அவர் தன்னுடைய அறியாமையை வெளிப்படுத்தி இருக்கிறார். இதுபோன்ற உண்மைக்கு மாறான கருத்துகளைத் திரித்து கூறுவதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார்.

Related Stories: