நண்பரை கொன்றதால் பழிக்குப்பழிவாங்குவதற்கு பிரபல ரவுடியை தீர்த்துக்கட்ட திட்டமிட்டது அம்பலம்: கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்

செங்கல்பட்டு: கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட தகராறில், பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிய 3 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில், பிரபல ரவுடியை தீர்த்துக்கட்ட திட்டமிட்டனர் என அவர்கள், வாக்குமூலம் அளித்துள்ளனர். செங்கல்பட்டு அருகே சிங்கபெருமாள்கோயில் பகுதியில் மர்மநபர்கள் சிலர், பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி வருவதாக எஸ்பி விஜயகுமாருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்படி, மறைமலைநகர் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தனசேகரன் ஆகியோர் கடந்த நேற்று முன்தினம், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரே பைக்கில்  வந்த 3 வாலிபர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

ஆனால், அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களை சோதனை செய்தபோது, பைக்கில்,  2 நாட்டு வெடிகுண்டுகள், 3 பட்டாக்கத்திகள் ஆகியவை இருந்தது. இதையடுத்து ஆயுதங்களுடன், அவர்களை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அதில், காட்டாங்கொளத்தூரில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், பிரபல ரவுடி  தனசேகருக்கும், பூச்சி ரத்தினசபாபதி என்பவருக்கும் இடையே,  கஞ்சா விற்பது தொடர்பாக, தகராறு இருந்தது. இதனால்  பூச்சி ரத்தினசபாபதி, தனசேகரனை ஓட ஓட விரட்டி, அவரது தலையை துண்டித்து, காட்டாங்கொளத்தூர் பிடிஒ அலுவலகம் முன்பு  நடுரோட்டில் வீசி சென்றார். இதையடுத்து, கொலை செய்யப்பட்ட ரவுடி தனசேகரனின் கூட்டாளியான கிஷோர் (20),  பூச்சி ரத்தினசபாபதியை பழிக்குப்பழி வாங்குவதற்காக, திட்டமிட்டு காத்திருந்தார்.

இந்நிலையில், காட்டாங்கொளத்தூரை சேர்ந்த அழகேசன் என்பவருடன் கிஷோருக்கு பழக்கம் எற்பட்டது. அவருடன் இணைந்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து, பூச்சி ரத்தினசபாபதியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அதன்படி அழகேசன், அவரது நண்பர் சிவகுமார் ஆகியோருடன் 2 நாட்டு வெடிகுண்டு மற்றும் 3  பட்டாக்கத்திகளோடு பைக்கில் சுற்றியபோது போலீசாரிடம் சிக்கினார்கள் என தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து பட்டாகத்தி,  வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>