திருவிடந்தை பெருமாள் கோயிலில் விரைவில் திருமண மண்டபம் கட்டப்படும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

திருப்போரூர்: மாமல்லபுரம் அருகே திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோயிலை நேற்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார். அப்போது, ‘கோயிலுக்கு சொந்தமான 4 ஏக்கர் இடத்தில் விரைவில் திருமண மண்டபம் கட்டப்படும்’ என தெரிவித்தார். மாமல்லபுரத்தில் இருந்து சென்னை நோக்கி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள, திருவிடந்தை கிராமத்தில் மிகப் பழமையான நித்திய கல்யாண பெருமாள் கோயில் உள்ளது. இங்கு, நேற்று காலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஊரகத்தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு, புதிதாக கட்டப்படும் திருமண மண்டபம், பிரகார மண்டபம், உணவருந்தும் கூடம், கோயில் தெப்பக்குளம் உள்பட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டனர்.

தொடர்ந்து, திருப்போரூர் கந்தசுவாமி  கோயிலில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன், அறநிலையத்துறை  ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர் செய்தனர். அங்கு  தங்கத்தேர், மரத்தேர் ஆகியவற்றை பார்வையிட்ட அமைச்சர் சேகர்பாபு,  அறநிலையத்துறை சார்பில் ரூ.2 கோடியில் கட்டப்பட்டு பயன்படுத்தப்படாமல் உள்ள  பக்தர்கள் தங்குமிடம், தங்கும் விடுதி, திருமண மண்டபம் ஆகியவற்றை  பார்வையிட்டு இன்னும் 6 வாரத்தில் அந்த கட்டிடங்களை திறந்து பக்தர்களின்  பயன்பாட்டிற்கு விட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும்,  2013-2014ம் ஆண்டில் கட்டி ஏன் இப்படி பூட்டி வைத்து அழகு பார்க்கிறீர்கள்.  ஏன் மக்கள் பணத்தை இப்படி பாழாக்குகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து,  கண்ணகப்பட்டில் உள்ள சிதம்பர சுவாமிகள் மடத்துக்கு சென்று, அவரது தியான  அறையையும், மடத்தில் நடைபெறும் திருப்பணிகளையும் பார்வையிட்டார். 10  வருடங்களாக இப்பணி நடைபெற்று வருவதாகவும், இன்னும் 2 மாதங்களில் இப்பணியை  முடித்து திறப்பு விழா நடத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார். பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோயில் சுமார் 1000 ஆண்டு பழமை வாய்ந்தது. தமிழகத்தில், 1000 ஆண்டுகள் கடந்த கோயில்களில், அந்தந்த திருக்கோயிலுக்கு சொந்தமான தேர்கள், குளங்கள், நந்தவனங்கள், கழிப்பறை வசதிகள் ஆகியவை முறையாக பராமரிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதையொட்டி, நித்திய கல்யாண பெருமாள் கோயிலில் உள்ள மண்டபங்கள், தெப்பக்குளம், கழிவறைகள், நந்தவனம் உள்பட பல்வேறு இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தேன். அதேபோல், இங்கு கட்டி முடிக்கப்பட்டுள்ள கழிப்பறை, கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் முறையாக பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. இக்கோயில், குளத்தை சுற்றி பூத்து குலுங்கும் வகையில் செடிகள் நட்டு, நீர் ஊற்றி பராமரிக்கப்படும். மிகப் பழமையான இக்கோயிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் மிக விரைவில் திருமண மண்டபம் கட்டப்படும். அதேபோல், கோயிலின் உள்பகுதியில் கற்கள் பதிக்காத இடத்தில் செடி, கொடிகள் வளர்த்து பராமரிக்கப்படும். 4 ஏக்கர் நிலத்தில், இக்கோயிலை சுற்றி பூங்கா அமைக்கப்படும். மேலும், மாமல்லபுரத்தில் இருந்து திருவிடந்தை வரை ஏதேனும் ஒரு பகுதியில் அரசு கல்லூரி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

திருப்போரூரில், சென்னையை சேர்ந்த அறக்கட்டளைக்கு சொந்தமான 100 ஆண்டுகள் பழமை மிக்க திருமண மண்டபத்தை கோயிலுக்கு ஒப்படைக்க நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி அந்த மண்டபம் கோயில் சார்பில் கையகப்படுத்தி பாரம்பரியம் மாறாமல் புதுப்பிக்கப்படும். கோயிலுக்கு சொந்தமான 700 ஏக்கர் நிலத்தில் 640 ஏக்கர் கோயில் வசம்தான் உள்ளது. மீதமுள்ள சுமார் 70 ஏக்கர் மீட்கப்பட்டு கோயில் பொறுப்பில் எடுக்கப்படும். கோயில் குளத்தின் இரு பக்கங்களில் கடந்த திமுக ஆட்சியின்போது பாதுகாப்பு வேலி போடப்பட்டது. மற்ற இரு பக்கங்களிலும் பாதுகாப்பு வேலி போடப்படும்.மேலும், குளத்தின் நான்கு புறமுள்ள சுற்றுச்சுவர் அகற்றப்பட்டு கலை நயத்துடன் கட்டப்படும். குளத்தின் நடுவே உள்ள நீராழி மண்டபம் பாழடைந்துள்ளது. அதை புதுப்பித்து மூலிகை வண்ணம் பூசப்படும்.

கோயிலுக்கு சொந்தமான இடத்தில் பிரமாண்ட வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டு அங்கிருந்து பேட்டரி கார் மூலம் பக்தர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்படும். இந்த பகுதிக்கு தேவைப்பட்டால் அறநிலையத்துறை சார்பில் கல்லூரி நடத்த வாய்ப்புள்ளதா என ஆய்வு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, முன்னாள் எம்எல்ஏ இதயவர்மன், திருப்போரூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பையனூர் சேகர், நகர செயலாளர் தேவராஜ், இந்து அறநிலையத் துறை முதன்மை செயலாளர் குமரகுருபரன், இணை ஆணையர்  ஜெயராமன் உள்பட பலர் இருந்தனர்.

 மாமல்லபுரத்தில் இருந்து திருவிடந்தை வரை ஏதேனும் ஒரு பகுதியில் அரசு கல்லூரி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

Related Stories: