அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் இந்தாண்டு முதல் மருத்துவ படிப்புகளில் ஓபிசி மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீடு: பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கும் 10%

புதுடெல்லி: அகில இந்திய மருத்துவ இட ஒதுக்கீட்டின் கீழ், நடப்பு  கல்வியாண்டு முதல் மருத்துவ படிப்புகளில் பொருளாதாரத்தில் பின் தங்கிய  முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீதமும், இதர பிற்படுத்தபட்டோருக்கு 27  சதவீத இடஒதுக்கீடு வழங்க இருப்பதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் பொது, பல் மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி திமுக உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் சாா்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை  விசாரித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக குழு அமைத்தது. இக்குழு தனது ஆய்வு முடிவில், 2020-2021ம் கல்வியாண்டு முதல் தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க பரிந்துரைத்தது.

இதனை ஏற்றுக் கொண்ட உயர்நீதி மன்றம், இட ஒதுக்கீட்டை செயல்படுத்த உத்தரவிட்டது. ஆனால், உச்ச நீதிமன்றத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ஒன்றிய அரசு அமல்படுத்தவில்லை என திமுக தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஒன்றிய அரசு தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு 69% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, ஒன்றிய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க மேலும் ஒரு வார காலம் அவகாசம் கோரப்பட்டிருந்தது.  இந்த வழக்கு விசாரணையில் எப்போது இடஒதுக்கீடு செய்யப்படும் என ஒன்றிய அரசுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதற்கு பதிலளித்த ஒன்றிய அரசு தரப்பு, கடந்த திங்கட்கிழமை பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவை ஒன்றிய அரசு தற்போது அறிவிப்பாக வெளியிட உள்ளது,’ என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, மாநில அரசு நடத்திவரும் மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (ஓபிசி) 27 சதவீதமும், உயர் பிரிவு ஏழைகளுக்கான, அதாவது பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடும் நடப்பு கல்வியாண்டிலேயே வழங்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. பொது, பல் மருத்துவத்தின் இளங்கலை, முதுகலை மற்றும் டிப்ளமோ படிப்புகளில் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.

இதன் மூலம், இளங்கலை மருத்துவ படிப்பில் 1,500 ஓபிசி, 550 பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களும், முதுகலை மருத்துவ படிப்பில் 2,500 ஓபிசி, 1,000 பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களும் பயன் பெறுவார்கள். மேலும், நாடு முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பபடும். எம்பிபிஎஸ், எம்டி, எம்எஸ், பிடிஎஸ், எம்டிஎஸ் படிப்புகளில் 4,000 மாணவர்கள் இந்தாண்டு கூடுதலாக பயன்பெறுவர் என ஒன்றிய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டபூர்வமாக வழங்க வேண்டிய இட ஒதுக்கீட்டை பல ஆண்டுகளாக இழுத்தடித்த ஒன்றிய அரசு, தமிழக அரசின் போராட்டம், உயர்நீதிமன்றத் தீர்ப்பு, அவமதிப்பு வழக்குகளை அடுத்து, அமல்படுத்த வேண்டிய நிர்பந்தத்தால் இட ஒதுக்கீடு வழங்கியதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

சமூக நீதிக்கான சிறந்த முன்னுதாரணம்

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், `நடப்பு கல்வியாண்டில், மருத்துவ படிப்பின் அனைத்து  பிரிவுகளிலும் ஓபிசி பிரிவினருக்கு 27%, பொருளாதாரத்தில் பின் தங்கிய  முன்னேறிய வகுப்பினருக்கு 10 % இட ஒதுக்கீடு வழங்கும் முக்கிய முடிவை  ஒன்றிய அரசு எடுத்து உள்ளது. இது, ஒவ்வொரு ஆண்டும், ஆயிரக்கணக்கான  இளைஞர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை உருவாக்குவதுடன், நாட்டின் சமூக நீதிக்கு  ஒரு புதிய முன்னுதாரணத்தை ஏற்படுத்தி உள்ளது,’ என்று கூறியுள்ளார்.

Related Stories:

>