கொசு உற்பத்திக்கு காரணமான வீட்டு உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டையில் கொசு உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்கியிருந்த வீட்டின் உரிமையாளருக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். சென்னையில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் வீடுகள், கடைகள், நிறுவனங்கள், அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் அதிகாரிகள் ஆய்வு செய்து, கொசு உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்கியுள்ள கட்டிட உரிமையாளருக்கு ரூ.100 முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்க மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, சுகாதாரத்துறை அதிகாரிகள்  ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில்  சென்னை  மாநகராட்சி 5வது மண்டலம், 49வது வார்டு பகுதிகளில் மண்டல நல அலுவலர் டாக்டர் வேல்முருகன் மேற்பார்வையில், பகுதி சுகாதார அலுவலர் மாப்பிள்ளை துரை தலைமையில் ஊழியர்கள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, வண்ணாரப்பேட்டை ரங்கம்மாள் தெருவில் ஜாக்சன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டை சுகாதார அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.அப்போது, அங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்கியிருந்தது தெரிந்தது.

மேலும் சுகாதார சீர்கேடாக காணப்பட்டது. இதனால், அந்த வீட்டின் உரிமையாளர் ஜாக்சனுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து, 49வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதும் உள்ள புதிய வீடுகள், பழைய வீடுகளில் கொசு உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்கியுள்ளதா என அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தொடர்ச்சியாக ஒவ்வொரு பகுதிகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: