தி.நகரில் பொதுமக்கள் முன்னிலையில் சைக்கிள் பயிற்சியில் ஈடுபட்ட மாணவனை வெட்டி வழிப்பறி

சென்னை: தி.நகர் அபிபுல்லா சாலையை சேர்ந்தவர் ஆனந்த் நம்பிராஜ். நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பாதுகாப்பு பிரிவு அதிகாரியாக உள்ளார். இவரது மகன் பிரதீஷ் சாய் (14). வாலிபால் போட்டியில் மாவட்ட அளவில் பங்கேற்று வெற்றி பெற்றவர். இவர், தினமும் சைக்கிள் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி நேற்று காலை அதே பகுதியில் சைக்கிள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அபிபுல்லா சாலையில் சென்றபோது, பைக்கில் வந்த 2 பேர், பிரதீஷ் சாயின் செல்போனை பறிக்க முயன்றனர்.

அவர்களிடம் இருந்து தப்பித்து, அங்குள்ள டீக்கடைக்குள் புகுந்து அவர் தஞ்சமடைந்தார். ஆனாலும், அந்த 2 பேர் விடாமல் துரத்தி சென்று டீக்கடைக்குள் புகுந்து கத்தியால் மாணவனை வெட்டி அவர் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து கொண்டு தப்பினர். படுகாயமடைந்த மாணவன் சிகிச்சை பெற்று, பின்னர் தனது தந்தை உதவியுடன் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று வழிப்பறி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Related Stories:

>