அனைத்து சாதிகளை சேர்ந்தவர்களையும் அர்ச்சகராக்கும் அரசாணையை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

சென்னை: ஆகம விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்களை மட்டுமே அர்ச்சகர்களாக நியமிக்கவும், தமிழில் அர்ச்சனை செய்யக்கூடாது எனவும் உத்தரவிடக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. சென்னை சிஐடி நகரை சேர்ந்த எஸ்.ஸ்ரீதரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர்கள் மட்டும் தான் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் என்று ஆகம விதிகள் வகுக்கப்பட்டிருக்கிறது. அதை மீறி அர்ச்சகர் பயிற்சியை முடித்துவிட்டால் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிப்போம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சமீபத்தில் அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அளித்த பேட்டியில், ஆட்சி அமைந்த 100 நாட்களுக்குள் அனைத்து சாதிகளை சேர்ந்தவர்களும் அர்ச்சகராக நியமிக்கப்படுவார்கள் என்று அறிவித்திருப்பது ஆகம விதிகளுக்கு முரணானது. தமிழில் அர்ச்சனை செய்வதும், குறிப்பிட்ட பிரிவினரை தவிர மற்றவர்கள் கருவறைக்குள் செல்வதும் ஆகம விதிகளுக்கு முரணானது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் 44 ஆயிரம் கோயில்கள் உள்ள நிலையில், 500 கோயில்களில் மட்டுமே ஆகம விதிகள் பின்பற்றப்படுகிறது. இந்த 500 கோயில்கள் தவிர 43500 கோயில்களில் தமிழக அரசு அறிவித்தபடி அனைவரையும் அர்ச்சகராக நியமித்துக் கொள்ளலாம்.

எனவே, அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க கூடாது எனவும், ஆகம விதிகளைப் பின்பற்றி குறிப்பிட்ட பிரிவினரை மட்டுமே அர்ச்சகராக நியமிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், வக்கீல் பி.முத்துக்குமார் ஆஜராகி, சிவாச்சாரியார்கள் வழக்கில் ஆகம விதிகள் படித்தவர்கள் அர்ச்சகர் ஆகலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதற்கு முரணாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவை ஆய்வு செய்துவிட்டு வாதங்களை முன் வைக்கும்படி மனுதாரருக்கு அறிவுறுத்தி விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories:

>