பெண் போலீஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு தந்த விவகாரம் சிறப்பு டிஜிபிக்கு உடந்தையாக இருந்த ஐஜி, டிஐஜி, எஸ்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு சிபிசிஐடி கடிதம்

சென்னை: முதல்வர் பாதுகாப்பு பணியின்போது, காரில் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் சிறப்பு டிஜிபிக்கு உடந்தையாக இருந்த ஐஜி, டிஐஜி, எஸ்பி ஆகிய 3 ஐபிஎஸ் ஆதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சிபிசிஐடி கடிதம் அனுப்பியுள்ளது. முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாதுகாப்பு பணியின்போது, பெண் எஸ்பி ஒருவரிடம் சிறப்பு டிஜிபி பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்த வேண்டும் என்று தனது காரில் ஏற்றி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து, அந்த பெண் எஸ்பி, சிறப்பு டிஜிபி மீது தமிழக உள்துறை செயலாளர், டிஜிபியிடம் புகார் அளிக்க காரில் சென்னை நோக்கி சென்றார். ஆனால், சிறப்பு டிஜிபி தனது அதிகாரத்தை பயன்படுத்தி பெண் எஸ்பி புகார் அளிக்கவிடாமல் தடுக்க முயற்சி செய்தார்.

அப்போது, மத்திய மண்டல ஐஜியாக இருந்து ஐபிஎஸ் அதிகாரி, பெண் டிஐஜி மற்றும் செங்கல்பட்டு எஸ்பியாக இருந்து ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேர் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் 50க்கும் மேற்பட்ட போலீசாருடன் வழிமறித்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பெண் ஐபிஎஸ் அதிகாரி, ‘தன்னிடம் தவறாக நடந்த சிறப்பு டிஜிபி மீது புகார் அளிக்க போவதாக புறப்பட்டார். அப்போது பெண் ஐபிஎஸ் அதிகாரியின் கார் சாவியை எடுத்து தகராறில் ஈடுபட்டனர். கடும் போராட்டத்துக்கு பிறகு பெண் ஐபிஎஸ் அதிகாரி, உள்துறை செயலாளர், டிஜிபியிடம் எழுத்து பூர்வமாக புகார் அளித்தார்.

அதன்படி முதன்மை செயலாளர் தலைமையில், விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணை நடத்தினர். அதில், ‘பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு, சிறப்பு டிஜிபி பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானது. மேலும், செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, பெண் ஐபிஎஸ் அதிகாரியை புகார் அளிக்கவிடாமல் தடுத்தது உறுதியானது. அதைதொடர்ந்து சிறப்பு டிஜிபி, ஐஜி, டிஐஜி மற்றும் எஸ்பி என 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பணியின்போது தவறாக நடக்க முயன்ற சிறப்பு டிஜிபி அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால், பெண் ஐபிஎஸ் அதிகாரியை புகார் அளிக்கவிடாமல் தடுத்த ஐஜி, டிஐஜி, எஸ்பி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாறாக அவர்கள் தற்போது பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுவாக ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், 197 சட்டப்பிரிவின் கீழ் மத்திய பணியாளர் தேர்வாணையம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பவேண்டும். அதன்படி மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க அனுமதி அளித்தபிறகு தான் சம்பந்தப்பட்ட ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். அந்த வழிமுறைகளின்படி, பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், புகார் அளிக்கவிடாமல் தடுத்த அப்போது பணியில் இருந்த மத்திய மண்டல ஐஜி, டிஐஜி, எஸ்பி ஆகிய 3 ஐபிஎஸ் அதிகாரிகள் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு ஏதுவாகவும் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டி தமிழக அரசுக்கு சிபிசிஐடி சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதன்படி தலைமை செயலாளர் தலைமையிலான குழு துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

* 400 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

பெண் எஸ்பி கொடுத்த பாலியல் புகார் சிபிசிஐடிக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது. பின்னர், சிறப்பு டிஜிபி, அவருக்கு உடந்தையாக இருந்ததாக முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது 4 பிரிவுகளில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பாலியல் புகார் தொடர்பாக 80க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் எஸ்பி, கடந்த ஏப்ரல் 23ம்தேதி, விழுப்புரம் 2வது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜராகி 6 மணி நேரத்துக்கு மேலாக ரகசிய வாக்குமூலம் அறிவித்து விட்டுச்சென்றார்.

தொடர்ந்து, இதுதொடர்பான வழக்கை விழுப்புரம் சிபிசிஐடி கூடுதல் எஸ்பி கோமதி தலைமையிலான போலீசார் விசாரித்து வந்த நிலையில், நேற்று விழுப்புரம் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி கோபிநாதன் முன்னிலையில், ஆஜரான சிபிசிஐடி கூடுதல் எஸ்பி கோமதி தலைமையிலான போலீசார், இவ்வழக்கு தொடர்பாக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ், முன்னாள் எஸ்பி கண்ணன் ஆகியோர் மீது 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அதில் 80 சாட்சிகளின் சாட்சியங்களும் இடம் பெற்றிருந்தது.

Related Stories: