தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஒரே நாளில் சவரன் ரூ.272 அதிகரிப்பு: நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி

சென்னை: தங்கம் விலை கடந்த 2 மாதமாக ஒரு நிலையான நிலையில் இல்லாமல் ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. சில நேரத்தில் விலை அதிகரித்தால், அதே வேகத்தில் அடுத்த சில நாட்களில் குறைவதுமான போக்கும் இருந்து வருகிறது. சில நேரங்களில் அதிரடியாக உயர்ந்து கொண்டே போவதும் உண்டு. கடந்த 26ம் தேதி கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,525க்கும், சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ஒரு சவரன் ரூ.36,200க்கும் விற்கப்பட்டது. 27ம் தேதி கிராமுக்கு ரூ.23 குறைந்து ஒரு கிராம் ரூ.4,502க்கும், சவரனுக்கு ரூ.184 குறைந்து ஒரு சவரன் ரூ.36,016க்கும் விற்கப்பட்டது.

நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,507க்கும், சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு சவரன் ரூ.36,056க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை தங்கம் விலை மேலும் அதிகரித்தது. அதாவது, கிராமுக்கு ரூ.23 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,530க்கும், சவரனுக்கு ரூ.184 அதிகரித்து ஒரு சவரன் ரூ.36,240க்கும் விற்கப்பட்டது. மாலையில் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. அதாவது, நேற்று முன்தினம் விலையை விட கிராமுக்கு ரூ.34 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,541க்கும், சவரனுக்கு ரூ.272 அதிகரித்து ஒரு சவரன் ரூ.36,328க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு ரூ.272 அதிகரித்துள்ளது நகை வாங்குவோரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Related Stories: