அடுத்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் ரூ.67,935 கோடியில் புதிய சாலை திட்ட பணிகள்: எம்பி தயாநிதி மாறன் கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்

புதுடெல்லி: தமிழகத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.67,935 கோடியில் புதிய தேசிய நெடுஞ்சாலை திட்ட பணிகள் நடைபெற உள்ளதாக எம்.பி தயாநிதி மாறன் கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்துள்ளார். மக்களவையில் மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக எம்பி தயாநிதி மாறன், ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்திற்கு எழுத்துப்பூர்வமாக பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார்.  

* தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள், அத்திட்டத்திற்கு அனுமதி வழங்கிய தேதி, நிறைவடையும் காலம், திட்டத்தின் மொத்த மதிப்பு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட தேதி, செலவிடப்பட்ட தொகை ஆகிய விவரங்களை தெரிவிக்கவும்.

* இந்த சாலை திட்டங்களில் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டு நிறுத்தப்பட்டு இருந்தால், அதை தீர்ப்பதற்கு ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?

* தமிழகத்தில் சாலை போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துவற்காக திட்டமிடப்பட்டுள்ள புதிய திட்டங்கள் விவரங்கள் என்ன? - ஆகிய கேள்விகளை அவர் கேட்டிருந்தார்.

இதற்கு ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ரூ.26,058 கோடியில் 83 தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் 1,717 கிலோ மீட்டரில் நடைபெற்று வருகிறது. இந்த திட்டங்களை நிறைவேற்றுவதில் முக்கிய பிரச்னைகளாக எதிர்கொள்வது கடன் வாங்கிய நிலத்தை பிரித்தெடுப்பதற்கான முன்நிபந்தனை வழங்குவதில் தாமதம், நிலம் கையகப்படுத்துவதில் தாமதம், நீர்நிலைப் பகுதிகளில் கட்டுமான பணிக்கு பொதுப்பணி மற்றும் நீர்வளத்துறை அனுமதி வழங்குவதில் தாமதம், வனத்துறையினரிடம் அனுமதி பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது.  

பணிகளை சரியான நேரத்தில் அல்லது முன்கூட்டியே முடிப்பதை உறுதி செய்வதற்காக, மாநில அரசு, மாவட்ட நிர்வாகம், சம்பந்தப்பட்ட துறைகள், வனத்துறை மற்றும் மாநில, ஒன்றிய அமைப்பு தொடர்பான நிலம் கையகப்படுத்துதல் மற்றும் பிற கட்டுமானத்திற்கு முந்தைய நடவடிக்கைகள் விரைவுப்படுத்தப்படுகின்றன. திட்டங்களின் வழக்கமான கண்காணிப்பு தவிர, பொறியாளர் மற்றும் ஒப்பந்தக்காரர்களுக்கு சலுகை வழங்கப்படுகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் ரூ.67,935 கோடி செலவில் 2,529 கி.மீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளை மேப்படுத்த புதிய திட்டங்களை அமைச்சகம் முன் மொழிந்துள்ளது. இவ்வாறு கட்கரி கூறியுள்ளார்.

Related Stories: