தமிழின் பெருமையை உலகறிய செய்வதால் பலருக்கு வயிறு எரிகிறது. நன்றாக எரியட்டும் : அமைச்சர் தங்கம் தென்னரசு காட்டம்!!

சென்னை: அக்டோபர் 12ம் தேதி செம்மொழி தமிழ் திருநாளாக கொண்டாட முதல்வர் அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, தமிழின் பெருமையை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அதனை உயர்நிலைக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழர் பாரம்பரியம், சிறப்புகள் இலக்கியத்தில் மட்டும் அல்லாமல் அனைத்து மட்டத்திலும் எடுத்துச் செல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழரின் பழங்கால நாகரீகத்தை பறைசாற்றவே கீழடி, கொந்தகை உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு நடந்து வருகிறது.தமிழரின் தொன்மை கிமு 2ம் நூற்றாண்டுக்கு முன்பு உள்ளது என்பது தொல்லியல் சான்றுகள் மூலம் நிரூபணம் செய்யப்படுள்ளது. கீழடி ஆய்வில் கிடைத்த சான்றுகள் மூலம் தமிழரின் நாகரிகம் கிமு 6ம் நூற்றாண்டுக்கு முந்தையது எனட் தெரியவந்துள்ளது.இதுவரை நடந்துள்ள அகழாய்வில் தமிழர் தொன்மையை பறைசாற்றும் சான்றுகள் கிடைத்துள்ளன.கீழடியில் 146 செ.மீ. ஆழத்தில் கிடைத்துள்ள வெள்ளி முத்திரைக்காக கிமு 4ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம்.

தொல்லியல் ஆய்வுகள் தேவையற்றது என்ற வார இதழில் வெளியான கட்டுரை கடும் கண்டனத்திற்குரியது. வேலையற்றவர்கள் எழுதுவது பற்றி நாம் கவலைப்பட வேண்டாம்.தொன்மையான தமிழர் பண்பாட்டை கண்டால் சிலருக்கு வயிறு எரிகிறது. நன்றாக எரியட்டும். தமிழ் பண்பாட்டு சூழலில் நாம் எடுத்திருக்கிற இந்த முயற்சியை கொச்சைப்படுத்தபவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள். பழந்தமிழர் நாகரிகத்தை பறைசாற்றுவதற்கான தொல்லியல் ஆய்வுகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்.நமக்கு இருக்கிற பெருமைகளை உரத்துச் சொல்வோம். பேரறிஞர் அண்ணா சொன்னது போல தமிழ் நாகரிக பண்பாட்டு தீ அகிலமெல்லாம் பரவட்டும். நம் உணர்வு பொங்கட்டும், பொங்கட்டும்,என்றார்.

Related Stories: