ரூ.1.83 கோடியில் 75வது சுதந்திர தின நினைவு தூண் அமைக்கும் பணிக்கு பொதுப்பணித்துறை டெண்டர் வெளியிட்டது

சென்னை : ரூ.1.83 கோடியில் 75வது சுதந்திர தின நினைவுத்தூண் அமைக்கும் பணிக்கு பொதுப்பணித்துறை டெண்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், இப்பணிகளை ஒரு மாதத்தில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நாட்டின் 75வது சுதந்திர தின விழாவையொட்டி சுதந்திர தின நினைவுத்தூண் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து சென்னை காமராஜர் சாலையில் நினைவுத்தூண் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. ஆரம்பத்தில் காமராஜர் சாலையில் போர் நினைவு சின்னம் அருகே இந்த நினைவுத்தூண் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள இடம் என்பதால் அந்த இடத்தில்  வைக்க அனுமதி கிடைக்கவில்லை.

எனவே, மாற்று இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. தற்போது விவேகானந்தர் இல்லம் அருகேயும், போர் நினைவு சின்னத்தில் இருந்து 500 அடி இடைவெளியில் உள்ள ஒரு இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த 2 இடங்களில் ஒரு இடம் தேர்வு செய்து அங்கு நினைவுத்தூண் அமைக்கப்படுகிறது. இதற்காக, கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.1.83 கோடி பராமரிப்பு நிதியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இப்பணிக்காக பொதுப்பணித்துறை சார்பில் கடந்த 26ம் தேதி டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

3 நாட்களில் குறுகிய கால டெண்டர் அடிப்படையில் இந்த டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த டெண்டரில் கலந்து கொள்ள பல ஒப்பந்த நிறுவனங்கள் விண்ணப்பித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நாளை மாலை ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு அந்த நிறுவனம் சார்பில் பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.சுதந்திர தின நினைவுத்தூண் அமைக்கும் பணியை ஒரு மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: