ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

மதுரை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல் இருக்கிறது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு ஒருவாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பதிலளிக்க தமிழக அரசு அவகாசம் கோரி இருப்பதால் விசாரணை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் மற்றொருவருக்கு பரோல் வழங்கப்பட்ட நிலையில் ரவிச்சந்திரனுக்கு விடுப்பு வழங்குவதில் என்ன சிக்கல் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இந்த வழக்கு குறித்து அரசு தரப்பில் உரிய தகவல் பெற்று தெரிவிக்கவும் உத்தரவிட்டுள்ளனர். வழக்கின் பின்னணியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஸ்வரி மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

அதில் இந்த வழக்கில் 27 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் மகன் ரவிச்சந்திரன் இருக்கிறார். இந்த வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன் அடிப்படையில் தமிழக அரசின் அமைச்சரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் தமிழக ஆளுநரின் ஒப்புதல் பெறுவதற்காக தொடர்ந்து காத்திருப்பில் உள்ளது. இந்நிலையில் ரவிச்சந்திரனுக்கு 3 மாத காலம் விடுப்பு வழங்கக்கோரி மனு அளித்த நிலையில் மத்திய அரசின் செயல் அதிகாரத்துக்கு உட்பட்ட சட்டப்பிரிவின் கீழ் தண்டனை பெற்றுள்ளதால் அவருக்கு சாதாரண விடுப்பு வழங்குவது குறித்து பரிசீலனை செய்ய இயலாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த உத்தரவையும் ஏற்கனவே தமிழக அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு ரவிச்சந்திரனுக்கு 2 மாத கால சாதாரண விடுப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கல்யாணசுந்தரம், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் இதுகுறித்து பதிலளிக்க கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டது. அதற்கு நீதிபதிகள் வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் மற்றொருவருக்கு பரோல் வழங்கப்பட்ட நிலையில் இவருக்கு விடுப்பு வழங்குவதில் என்ன சிக்கல் என கேள்வி எழுப்பினர். மேலும் இதுகுறித்து அரசிடம் உரிய தகவல் பெற்று தெரிவிக்க வழக்கினை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளனர்.

Related Stories: