தேனியில் ஆக்கிரமிப்பால் தவிக்குது ‘பஸ் ஸ்டாண்ட்’

*அல்லோலப்படும் பயணிகள்

தேனி : தேனி பழைய பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்புகளால் பயணிகள் தவியாய் தவித்து வருகின்றனர். தேனி நகர் மத்தியில் பழைய பஸ் ஸ்டாண்ட் உள்ளது. போக்குவரத்து நெருக்கடியால், கடந்த 2013ல் தேனி பைபாஸ் சாலையில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டது. இதனையடுத்து, பழைய பஸ் ஸ்டாண்ட், தேனி பஸ் முனையமாக இயங்கி வருகிறது.

இந்த பஸ் ஸ்டாண்டிலிருந்து போடி, கம்பம், குமுளி, மூணாறு ஆகிய வழித்தடங்களுக்கு பஸ்கள் சென்று வருகின்றன. மேலும் தேனியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் டவுன்பஸ்களும் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. இதனால் இங்கு எப்போதும் பயணிகள் கூட்டம் மிகுந்து காணப்படும்.

இந்த பஸ் ஸ்டாண்டின் நுழைவு வாயில் பகுதியில் ஏற்கனவே ஏராளமான பழக்கடைகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளன. இதனால் பயணிகள் நடந்து செல்ல முடியாமல் சிரமமடைந்து வந்தனர்.

இந்நிலையில் இங்கு புதிதாக ஆக்கிரமிப்பு பழக்கடைகள் முளைத்துள்ளன. பஸ் ஸ்டாண்ட் வளாகத்திற்குள் ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ்களை நிறுத்துவதில் இடையூறு ஏற்படுகிறது. பயணிகள் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: