பூந்தொட்டியாக மாறிய ஜீன்ஸ் பேண்ட் அலங்கார செடி வளர்ப்பில் அசத்தும் கட்டிட தொழிலாளி

ஊட்டி : நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவர், பயன்படுத்திய பழைய ஜீன்ஸ் பேண்ட், ஷூ, பெல்ட் போன்றவற்றை குப்பையில் வீசாமல், அழகிய பூந்தொட்டியாக மாற்றி தனது வீட்டை மினி பூந்தோட்டமாக மாற்றியுள்ளார். கோத்தகிரி அருகே உள்ள ஒரசோலை, அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. கட்டிட தொழிலாளியான இவர், கட்டுமான பணிகளுக்காக பல இடங்களுக்கு செல்வது வழக்கம்.

அப்படி செல்லும் போது பலரது வீடுகளிலும் பூந்தோட்டங்களை பராமரிப்பதை கண்டு, பெரியசாமிக்கும் ஈர்ப்பு ஏற்பட்டு தனது வீட்டிலும் பூச்செடிகளை நடவு செய்யும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் இருந்து பூச்செடிகளை கொண்டு வந்து நல்ல முறையில் பராமரித்து வருகிறார். கட்டிட தொழிலாளி என்பதால், பூந்தொட்டிகளை வெளியில் வாங்காமல் சிமெண்ட் கலவைகள் மூலம் கலை நயமிக்க புதிய வடிவிலான பூந்தொட்டிகளை வடிவமைத்து அதில் பூச்செடிகளை நடவு செய்து பராமரித்து வருகிறார்.

இதே போன்று புது முயற்சியாக பயன்படுத்த முடியாத பழைய ஜீன்ஸ் பேண்ட்களை பூந்தொட்டியாக மாற்றி அதில் பூச்செடிகளை வளர்த்து வருகிறார். இவரது இந்த முயற்சி உள்ளூர் மக்களிடம் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்று வருகிறது. இது குறித்து பெரியசாமி கூறுகையில்,`கட்டிட வேலைக்காக பல இடங்களுக்கு செல்லும் போது, பெரிய பங்களாக்களில் அமைக்கப்பட்டு இருக்கும் பூந்தோட்டங்கள் போல நாமும் வளர்க்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. பல டிசைன்ல சிமெண்ட் பூந்தொட்டியை நானே செய்து அவற்றில் மலர் செடிகளை நடவு செய்து வளர்த்து வந்தேன்.

பழைய ஜீன்ஸ் பேண்ட்களை பூந்தொட்டிகளாக மாற்றி அதில் செடிகள் வளர்த்தால் என்ன என்ற எண்ணம் ஏற்பட்டது. உடனே பழைய ஜீன்ஸ்களை சேகரித்து ஷூ, பெல்ட் இதெல்லாம் பயன்படுத்தி பாதி அளவு சிமெண்ட் கலவை, மீதிக்கு மண் போட்டு தொட்டியாக மாத்தி செடிகளை நட்டேன். பயன்படுத்திய பொருள்களை வீணாக தூக்கி குப்பைல போடாமல் பயனுள்ளவையாக மாற்ற வேண்டும்’ என்றார்.

Related Stories: