இருளில் மூழ்கும் மலைக்கிராமங்கள் பழுதான சோலார் மின் விளக்குகளை சீரமைக்க வேண்டும்

* மலைவாழ் மக்கள் கோரிக்கை

வருசநாடு : சோலார் மின் விளக்குகள் பழுதடைந்துள்ளதால், வருசநாடு அருகே உள்ள மலைக்கிராமங்கள் இரவு நேரங்களில் இருளில் மூழ்குகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் மின்விளக்குகளை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.வருசநாடு அருகே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அரசரடி, இந்திராநகர், வெள்ளிமலை, பொம்மராஜபுரம், நொச்சிஓடை உள்ளிட்ட ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன.

இந்த கிராமங்களில் மின்சார வசதி இல்லை. இதையொட்டி கடந்த திமுக ஆட்சியின்போது அரசு சார்பில் இந்த மலைக்கிராமங்களில் சோலார் மின் விளக்குகள் பொருத்தப்பட்டன. ஆனால் கடந்த அதிமுக ஆட்சியின்போது, உரிய பராமரிப்பு மேற்கொள்ளப்படவில்லை. இதனால் சோலார் மின் விளக்குகளில் பெரும்பாலானவை பழுதடைந்தன. அவற்றை சீரமைக்க வேண்டும் என மலைக்கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் மலைக்கிராமங்கள் இருளில் மூழ்கின்றன.

வனப்பகுதியில் வன விலங்குகள் அதிகளவில் உள்ளன. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் மாணவர்கள் பாடங்களை படிக்க முடியாத நிலை உள்ளது. பழுதடைந்த சோலார் விளக்குகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘சோலார் விளக்குகள் பழுதால், இரவு நேரங்களில் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இது தொடர்பாக கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories:

>