வலையில் விழுந்த மீன்கள் விலையிலும் ‘விழுந்தது’

*பாம்பன் மீனவர்கள் கவலை

ராமேஸ்வரம் : மன்னார் வளைகுடா கடலில் மீன் பிடித்து திரும்பிய படகுகளில் அதிகளவில் முண்டக்கண்ணி மீன்கள் சிக்கியது. விலை குறைவால் மீனவர்கள் கவலையடைந்தனர். ராமேஸ்வரம் அருகே பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் இருந்து நேற்று முன்தினம் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மன்னார் வளைகுடா கடலில் மீன் பிடிக்க சென்றனர். இரவு முழுவதும் கடலில் மீன் பிடித்து நேற்று கரை திரும்பிய படகுகளில் அதிகளவில் குமுலா வகையை சேர்ந்த முண்டக்கண்ணி மீன்கள் பிடிபட்டு இருந்தது.

அதிகபட்சமாக 800 கிலோ வரை படகுகளில் மீன் வரத்து இருந்தது. பாம்பன் கரை வந்து சேர்ந்த படகில் இருந்த மீன்களை பிளாஸ்டிக் கூடைகளில் சேகரித்த மீனவர்கள் சிறிய நாட்டுப்படகு மூலம் கரைக்கு கொண்டு வந்து கடற்கரை மணலில் விற்பனைக்கு அடுக்கி வைத்தனர். மீன்களை கொள்முதல் செய்ய வந்த வியாபாரிகள் வழக்கத்தை விட குறைந்த விலைக்கு மீன்களை வாங்கினர்.

வழக்கமாக ஒரு கிலோ ரூ.100க்கு விலை போகும் முண்டக்கண்ணி மீன்கள் நேற்று ரூ.50 முதல் 60 ரூபாய் வரை விலை போனது. கேரள கடல் பகுதியில் குமுலா மீன்வரத்து அதிகமாக இருப்பதால், முண்டக்கண்ணி மீன்கள் குறைந்த விலைக்கு போனது. படகில் மீன்பாடு அதிகமாக இருந்தபோதும் உரிய விலை கிடைக்காததால் மீன் பிடித்து திரும்பிய மீனவர்கள் கவலையடைந்தனர்.

Related Stories: