சேலம் அரசு மருத்துவமனையில் ₹1.20 கோடியில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கும் பணி தொடக்கம்

* ஒரு நிமிடத்திற்கு 1000 லிட்டர் தயாராகும்

சேலம் : சேலம் அரசு மருத்துவமனையில் புதிதாக 2 ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. டீன் வள்ளி சத்தியமூர்த்தி கூறியதாவது:  சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மையமாக அரசு மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு சேலம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது, அரசு மருத்துவமனையில் 48 ஆயிரம் கிலோ லிட்டர் ஆக்சிஜன் கொள்கலன் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 1400 படுக்கைளுக்கு நேரிடையாக ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, கூடுதலாக 6 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் கொள்கலன் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக 500 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்படும்.

தற்போது, சேலம் அரசு மருத்துவமனையில் மத்திய அரசு நிதியில் இருந்து புதிதாக 2 ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் நெடுஞ்சாலை துறை மூலமாக பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்காக ₹1.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டிடத்திற்கு பின்புறம் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த மையம் அமைப்பதன் மூலம் ஒரு நிமிடத்திற்கு 1000 லிட்டர் ஆக்சிஜன் தயாரிக்கப்படும். 2 மையங்களிலும் சேர்த்து 2000 லிட்டர் ஆக்சிஜன் தயாரிக்கப்படும். இதன் மூலம் 200 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வழங்க முடியும். தற்போது, தயாரிக்கப்படும் ஆக்சிஜனை நேரிடையாக படுக்கைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை சிலிண்டர்கள் மூலமாக சேமித்து வைக்க முடியும். தனியாக கொள்கலன் அமைத்து சேமித்து வைக்க முடியாது.  இவ்வாறு டீன் கூறினார்.

Related Stories: