ஏரிகள் குடிமராமத்து பெயரில் அதிமுகவினர் ₹5 கோடி கொள்ளை

* முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் எம்எல்ஏ ஆவேசம்

செய்யாறு :  செய்யாறு டிவிஷனில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல ஏரிகள் குடிமராமத்து என்ற பெயரில் அதிமுகவினர் ₹5 கோடி அளவிற்கு கொள்ளை அடித்துள்ளனர். இதுகுறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பேன் என எம்எல்ஏ ஒ.ஜோதி ஆவேசமாக குறிப்பிட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதியில் வட தண்டலம் கிராம பெரிய ஏரியில் ₹35 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து பணி செய்தும் பணிகள் சரிவர செய்யாததால் கடந்த வாரம் பெய்த மழைநீர் இரண்டு மாத அளவிற்கான பாசன நீர் வீணாக வெளியேறியதாக அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்திருந்தனர்.  இதனை தினகரன் நாளிதழில் நேற்று படத்துடன் விரிவாக செய்தி வெளியிட்டு சுட்டிக்காட்டியது. இதனையடுத்து செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி நேற்று வட தண்டலம் ஏரியில் புனரமைக்கப்பட்ட பகுதிகளில் மதகின் சேதம், பலவீனமான ஏரிக்கரை, தண்ணீர் வீணாக செல்லும் கால்வாய் உள்ளிட்டவைகளை நேரில் பார்வையிட்டார்.

பின்னர் நிருபர்களிடம் எம்எல்ஏ ஒ.ஜோதி கூறியதாவது:  கடந்த அதிமுக ஆட்சியில் வட தண்டலம் கிராமத்தில் நிலமே இல்லாத ஒருவரை ஆயக்கட்டு காரராக போலியாக பதிவு செய்து பாசன சங்க தலைவராக நியமித்து ₹35 லட்சத்தில் குடிமராமத்து என்ற பெயரில் அரைகுறை வேலை செய்து லட்சக்கணக்கில் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். கால்வாய்களும் சீராக அமைக்கப்படவில்லை, கரைகளை பலப்படுத்தவில்லை, மதகும் சீராக அமைக்கப்படவில்லை.

இதனால் ஏரியில் தேங்கிய தண்ணீர் வீணாக வெளியேறி விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். செய்யாறு டிவிஷன் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் பல ஏரிகளை அதிமுகவினர் 50 சதவிகித வேலைகளைக் கூட செய்யாமல் பில் போட்டு குடிமராமத்து என்ற பெயரில் ₹5 கோடி அளவிற்கு கொள்ளையடித்துள்ளனர்.  

சில தினங்களில் தொகுதியில் பல ஏரிகளை ஆய்வு செய்ய உள்ளேன். இப்படி செய்யாறு தொகுதியில் குடிமராமத்து பணிகளில் நடந்த கொள்ளைகள் குறித்தும் அதற்குத் துணைபோன அதிகாரிகள் மீது நடவடிக்கை குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களின் உதவியோடு தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வேன் என்றார்.  

ஆய்வின்போது ஊராட்சி தலைவர் பாரதி பரசுராமன், முன்னாள் நகராட்சி தலைவர் சம்பத், ஒன்றிய கவுன்சிலர் ஞானவேல், வடபூண்டிபட்டு ஊராட்சித் தலைவர் சுந்தரேசன், கோபு, துரைசாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். ஆய்வில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்காமல் கடைநிலை ஊழியர்கள் மட்டுமே பங்கேற்றிருந்தனர்.

Related Stories: