50க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருந்தும் இதுவரை இயக்கப்படவில்லை செங்கம்- ஜமுனாமரத்தூர் வழித்தடத்தில் பஸ் வசதி

போளூர் :  செங்கம்- ஜமுனாமரத்தூர் வழித்தடத்தில் அரசு பஸ் இயக்குவதற்கு அதிகாரிகள் குழுவினருடன் கலெக்டர் பா.முருகேஷ் நேரில் ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது ஜவ்வாதுமலை தாலுகா. சுமார் 150 கிலோ மீட்டர் பரப்பளவில் இந்த ஒன்றியம் அமைந்துள்ளது. ஒன்றிய தலைநகரான ஜமுனாமரத்தூரிலிருந்து ஆலங்காயம், போளூர், அமிர்தி வழியாக வேலூரில் ஆகிய வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

ஆனால் ஜமுனாமரத்தூரிலிருந்து செங்கம் செல்லும் வழித்தடத்தில் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருந்தும் இந்த பாதையில் இதுவரை பஸ் இயக்கப்படவில்லை. இந்த சாலையில் சில இடங்களில் ஆபத்தான வளைவு பகுதிகள் மற்றும் தடுப்பு சுவர் அமைத்தல் போன்ற பணிகள் முடிவடைந்தால் பஸ் இயக்கப்படும் சூழ்நிலை உள்ளது.  எனவே இந்த சாலையை சீரமைத்து பஸ்கள் இயக்கப்பட வேண்டுமென தொடர்ந்து மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

   அதனடிப்படையில் கலெக்டர் பா.முருகேஷ் செங்கம், பரமனந்தல், மேல்பட்டு, புலியூர், கூட்டாத்தூர், கல்யாணமந்தை, அத்திப்பட்டு வரை உள்ள சுமார் 38 கிலோ மீட்டர் சாலையை ஆய்வு செய்தார். அப்போது சாலையை தேவையான இடங்களில் அகலப்படுத்தவும், தடுப்பு சுவர் அமைக்கவும் உத்தரவிட்டார்.

நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ந.முரளி, அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர் (வணிகம்) க.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வன அலுவலர் என்.அருண்லால்  உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து ஜவ்வாதுமலை யூனியனில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார். மேல்பட்டு கிராமத்தில் ₹6 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட தனிநபர் கிணறு, தென்மலை அத்திப்பட்டு கிராமத்தில் ₹15.70 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் அங்கன் வாடி, கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.

இதே போல் புலியூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தார். கோவிட் தடுப்பூசி போடும் பணியினையும் பார்வையிட்டார்.  அப்போது கலெக்டரை சந்தித்த மலைவாழ் மக்கள் எங்கள் ஊர் கிராம நிர்வாக அலுவலர் ப.ஞானசேகரன் கிராமத்திற்கு சரிவர வருவதில்லை எனவும்  சான்றிதழ்களில் கையொப்பம் போட தேவையற்ற காலதாமதம் செய்வதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் தெரிவித்து மனுவும் கொடுத்தனர்.    

தொடர்ந்து ஜமுனாமரத்தூரில் ஜவ்வாதுமலை வாழ்மக்களின் மேம்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலருக்கான ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் பா.முருகேஷ் தலைமை தாங்கி பேசினார். கூடுதல் கலெக்டர் மு.பிரதாப், ஆரணி சப்-கலெக்டர் என்.கவிதா, மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் ந.சந்திரா, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் என்.லட்சுமிநரசிம்மன், ஒன்றிய குழு தலைவர் எம்.ஜீவாமூர்த்தி, ஒன்றிய குழுதுணை தலைவர் செ.மகேஸ்வரிசெல்வம்  மற்றும் வேளாண்மைத்துறை, கால்நடைத்துறை, தோட்டக்கலைத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தாட்கோ, மருத்துவத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பேசினர்.    முன்னதாக  மலைவாழ் மக்கள் 25 பேருக்கு எஸ்டி ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டது. ஜமுனாமரத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ந.பிரகாஷ் நன்றி கூறினார்.

Related Stories: