அதிவேகமாக காரை ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்திய வழக்கு!: நடிகை யாஷிகா ஆனந்திடம் விசாரணை நடத்த போலீஸ் முடிவு..!!

சென்னை: மாமல்லபுரம் அருகே அதிவேகமாக காரை ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்திய வழக்கில் திரைப்பட நடிகை யாஷிகா ஆனந்திடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். கடந்த 24ம் தேதி நள்ளிரவு நடிகை யாஷிகா ஆனந்த் நண்பர்களுடன் காரில் கிழக்கு கடற்கரை சாலையில் வேகமாக வந்த போது சாலை தடுப்பில் மோதி விபத்திற்குள்ளானது. கார் கவிழ்ந்ததில் யாஷிகாவை பார்ப்பதற்காக வந்த ஹைதராபாத்தை சேர்ந்த அவரது தோழி பவானி உயிரிழந்தார். நடிகை யாஷிகா மற்றும் அவரது நண்பர்கள் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து யாஷிகாவின் நண்பர் நந்தகுமார் மாமல்லபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதன்பேரில் அதிவேகமாக காரை இயக்குதல், மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் செயல்படுதல், மரணத்தை விளைவிக்கும் குற்றம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் யாஷிகா ஆனந்த் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து, அவரது ஓட்டுநர் உரிமத்தை பறிமுதல் செய்திருக்கும் போலீசார், அதனை ரத்து செய்யவும் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் யாஷிகாவிடம் விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். எனவே அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

Related Stories:

>