அளவுக்கு அதிகமாக பனம்பழம் சாப்பிட்டதால் மேட்டூர் வனப்பகுதியில் யானை பலி

மேட்டூர்  : சேலம் மாவட்டம், மேட்டூர் வனச்சரகம் பச்சபாலமலை காப்புக்காட்டில் உள்ளது முத்துமாரியம்மன் கோயில் வனப்பகுதி. இங்கு நீரோடை உள்ளதால், யானைகள் அதிக அளவில் இப்பகுதியில் தங்கியுள்ளன. இந்த வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில், பனை மரங்கள் அதிக அளவில் உள்ளன. இப்பகுதியில் திரிந்த சுமார் 22 வயது மதிக்கத்தக்க ஆண் யானை, அளவுக்கு அதிகமாக பனம் பழங்களை சாப்பிட்டுள்ளது. இதனால் ஜீரண கோளாறு ஏற்பட்டு, யானையின் வயிறு வீங்கியுள்ளது. சுமார் ஒருவார காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த யானை திடீரென  உயிரிழந்தது.

நேற்று முன்தினம், இதுகுறித்த தகவல் அறிந்த சேலம் மாவட்ட வன அலுவலர் முருகன், மேட்டூர் வனச்சரகர் பிரகாஷ் மற்றும் கால்நடை மருத்துவர், வன ஊழியர்களுடன் பச்சபாலமலை காப்புக்காடு பகுதிக்கு சென்று, இறந்து கிடந்த யானையின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது, யானையின் வயிற்றில் ஏராளமான பனங்கொட்டைகள் இருந்தன. தொடர்ந்து யானையை அங்கேயே பள்ளம் தோண்டி புதைத்தனர். யானையின் இரண்டு தந்தங்களும் அகற்றப்பட்டு, மேட்டூர் வன அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>