ஆலங்காயம் ஒன்றிய மலை கிராமங்களுக்கான சிறப்பு நிதியிலும் புகுந்து விளையாடிய பிடிஓக்கள்

*அனைத்து நிலையிலும் விசாரணை நடத்த கோரிக்கை

வேலூர் : ஆலங்காயம் ஒன்றிய மலை கிராமங்களுக்கான மாதாந்திர சிறப்பு நிதியிலும் பிடிஓக்கள் புகுந்து விளையாடியுள்ளதையும் அவர்கள் மீதான விசாரணைக்கான அம்சங்களில் சேர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழக ஊரக வளர்ச்சித்துறையில் கடந்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அவ்வபோது உரிய ஆதாரங்களுடன் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

குறிப்பாக அரக்கோணம், நெமிலி, திமிரி, அணைக்கட்டு, ஆலங்காயம், கே.வி.குப்பம், மாதனூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஒன்றியங்களில் எழுந்த புகார்களின் மீது இப்போதும் துறை ரீதியான விசாரணைகளும், விஜிலென்ஸ் போலீசாரின் விசாரணைகளும் தொடர்ந்து வருகின்றன. அந்த வகையில் கடந்த 2017-18ம் ஆண்டுகளில் அப்போதைய வேலூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்தில் பல்வேறு ஊராட்சிகளில் பிரதமரின் வீடு கட்டும் திட்டம், ஊரக உள்கட்டமைப்பு திட்டங்களில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது.

இதில் நெக்னாமலை ஊராட்சியில் அய்யம்மாள்(60) என்ற மூதாட்டி கடந்த ஆண்டு பெய்த மழையில் சுவர் இடிந்து விழுந்து பலியானார். ஆனால் இவருக்கு பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டி கொடுக்கப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டு நிதி கையாடல் நடந்துள்ளது தெரிய வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக நடந்த விசாரணையில் அய்யம்மாள் உட்பட 23 பேருக்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.

மேலும் இத்திட்டத்தில் தகுதியில்லாத 23 பேருக்கு வீடு கட்டி கொடுக்கப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டு ₹35 லட்சத்து 31 ஆயிரத்து 517 கையாடல் செய்திருப்பதும் விசாரணையில் உறுதியானது. அதன் அடிப்படையில் பிடிஓக்கள் ரமேஷ்குமார், வின்சென்ட் ரமேஷ்பாபு, வசந்தி உட்பட 18 பேர் மீது விஜிலென்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதேநேரத்தில் முறைகேட்டில் சிக்கியவர்களுக்கு துறையின் சார்பில் வெறும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் மட்டும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆலங்காயம் ஒன்றியத்தில் அடங்கியுள்ள 17 மலை கிராமங்களில் ஒவ்வொரு மாதமும் மலை கிராம ஊராட்சிகளுக்கான சிறப்பு ஒதுக்கீடாக கிடைக்கும் ₹17 முதல் ₹25 லட்சம் வரையிலான நிதியிலும் பிடிஓக்கள் புகுந்து விளையாடியுள்ளனர். இதில் கடந்த 2019-20, 2020-21 நிதி ஆண்டுகளிலும் இத்தகைய கையாடல் நடந்துள்ளது.

எனவே, ஆலங்காயம் ஒன்றியத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த நிதிசார்ந்த அனைத்து திட்டங்கள், நடவடிக்கைகளிலும் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த விசாரணையில் குறுக்கீடுகள் ஏதுமின்றி சம்பந்தப்பட்ட அலுவலர்களை அங்கிருந்து விலக்கி வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விசாரணையை முடக்க முயற்சி

ஆலங்காயம் ஒன்றியத்தில் நடந்த நிதி கையாடலில் தங்கள் மீதான நடவடிக்கையை தடுக்கும் வகையில் புகாரில் சிக்கியவர்கள் தற்போது விடுப்பு எடுத்து அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனர். அதேபோல் நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் குறிப்பாக திருப்பத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில் சாந்தமான பெண் அலுவலர் ஒருவரும் தீவிரம் காட்டி வருவதாக சக அலுவலர்கள் மத்தியிலேயே பேச்சு எழுந்துள்ளது.

Related Stories:

>