'பாஜகவுக்கு எதிரான அணியின் தலைவர் சூழலை பொறுத்து முடிவாகும்': பாஜக என்ற பூனைக்கு மணி கட்டுவதே தனக்கு முக்கியம்..மம்தா பானர்ஜி பேச்சு..!!

டெல்லி: பாஜகவுக்கு எதிராக உருவாகும் கூட்டணியில் தலைவர் யார் என்பது சூழ்நிலையை பொறுத்து இருக்கும் என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். பெகாசஸ் விவகாரம் பூதாகரமாகி உள்ள நிலையில் மம்தா பானர்ஜி 5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். தேசிய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள பயணத்தின் தொடக்கமாக நேற்று பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். பின்னர் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி உள்பட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, அரசியல் நிலவரம், பெகாசஸ் விவகாரம், கொரோனா உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து சோனியாகாந்தியுடன் பேசியதாகவும் இந்த சந்திப்பு நன்றாக அமைந்தது என்றும் தெரிவித்தார். பாஜகவுக்கு எதிராக உருவாகும் அணிக்கு தலைமை வகிக்க போவது யார் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மம்தா, தான் ஜோசியம் அறிந்தவர் அல்ல என்றும் எனினும் பாஜகவுக்கு எதிராக உருவாகும் அணிக்கு யார் தலைவர் என்பது சூழலை பொறுத்து முடிவாகும் என்றார்.

பாஜகவுக்கு எதிரான கூட்டணிக்கு யார் தலைவராக வந்தாலும் அது தனக்கு சம்மதம் தான் என்றும் மம்தா கூறினார். பாஜக என்ற பூனைக்கு மணி கட்டுவதே தனக்கு முக்கியம் என்றும் அவர் கூறினார். கடந்த மேற்குவங்காள தேர்தலை, ஆட்டம் தொடங்கிவிட்டது என்ற முழக்கத்துடன் தங்கள் கட்சி எதிர்கொண்டதாகவும் வரும் மக்களவை தேர்தலில் அக்கோஷம் நாடெங்கும் எதிரொலிக்கும் என்றும் மம்தா குறிப்பிட்டார்.

பாஜக எண்ணிக்கை அளவில் பெரியதாக இருந்தாலும், எதிர்க்கட்சிகள் அரசியல் ரீதியாக வலிமையாக இருப்பதாகவும் அவை இணைந்தால் வரலாறு நிச்சயம் உருவாகும் என்றும் மம்தா தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்று சோனியாகாந்தியும் விரும்புவதாக மேற்குவங்க முதல்வர் கூறினார். 

Related Stories: