நெல்லையில் காவலர் பணிக்கு உடற்தகுதி தேர்வு 22 நாள் கைக்குழந்தையுடன் தேர்வுக்கு வந்த இளம்பெண்

*அறிவுரை கூறி அனுப்பினர்

நெல்லை : தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2020ம் ஆண்டு நடத்திய காவல், சிறை மற்றும் தீயணைப்புத்துறை, 2ம் நிலை காவலர்களுக்கான எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆண்களுக்கு நெல்லை ஆயுதப்படை மைதானத்திலும், பெண்களுக்கு பாளை சேவியர் கல்லூரி மைதானத்திலும் கடந்த 26ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்கூறு அளத்தல், உடற்தகுதித் தேர்வு ஆகியவை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பாளை சேவியர் கல்லூரியில் நேற்று நடந்த பெண்களுக்கான உடற்தகுதி தேர்வில் பங்கேற்க  400 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இதில் 289 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். 111 பேர் வரவில்லை. இந்த தேர்வுக்கு, 22 நாட்களே ஆன கைக்குழந்தையோடு வைகுண்டத்தைச் சேர்ந்த இளம்பெண் உடற்தகுதி தேர்வுக்கு வந்தார்.

 போலீஸ் அதிகாரிகள் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அவரது உடல் நிலை கருதி, உடற்தகுதித் தேர்வில் பங்கேற்க வேண்டாம் என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.  இதேபோல் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பி.இ. முடித்த பெண் ஒருவர், வரும் ஆவணி மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் தகுதித் தேர்வில் பங்கேற்க வந்தார். அவருக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை இதில் பங்கேற்க வேண்டாம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் உடற்தகுதித் தேர்வுக்கு வந்த பெண்ணை, அப்பெண்ணின் பெற்றோர் மீண்டும் அழைத்துச் சென்றனர்.

தந்தை இறந்த 3வது நாளில் தேர்வு

பாளை ஆயுதப்படை மைதானத்தில் ஆண்களுக்கான உடற்தகுதி தேர்வில் 500 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. இதில் 398 பேர் பங்கேற்றனர். 102 பேர் தேர்வுக்கு வரவில்லை. இதில் சிவகிரியைச் சேர்ந்த ஒரு இளைஞர் தந்தை இறந்த 3வது நாளில் உடற்தகுதித் தேர்வில் பங்கேற்றார். தந்தை இறந்த நிலையிலும் வேலை பெற வேண்டும் என்ற நோக்கில் அவர் தகுதி தேர்வில் பங்கேற்றது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

Related Stories: