தமிழகத்தில் நலிவுற்ற குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க 12 பேர் அடங்கிய நிபுணர் குழு: தொழிலதிபர்கள், வங்கி, நிதித்துறை வல்லுனர்களை நியமித்தது தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் நலிவுற்ற குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுப்பதற்கான திட்டங்களை வகுக்க தொழிலதிபர்கள், வங்கியாளர்கள், நிதித்துறை வல்லுனர்களை கொண்ட 12 பேர் குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கினை வகிப்பதுடன் வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க பங்கினை வழங்கி வருகின்றன. இந்நிறுவனங்கள் கோவிட் பெருந்தொற்று மற்றும் பல்வேறு பொருளாதார காரணங்களால் பாதிக்கப்பட்டு மிகவும் கடினமான சூழலை சந்தித்து வருகின்றன.

சட்டமன்ற பேரவையில் கடந்த மாதம் ஆளுநர் ஆற்றிய உரையில் “நலிவுற்ற குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுப்பதற்கான திட்டங்களை வகுப்பதற்காக தொழிலதிபர்கள், வங்கியாளர்கள், நிதித்துறை வல்லுநர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் அடங்கிய நிபுணர்குழு அமைக்கப்படும்” என்று அறிவிப்பு செய்யப்பட்டது. மேற்கண்ட அறிவிப்பிற்கிணங்க குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுப்பதற்கான திட்டங்களை வகுப்பதற்கான குழுவினை ந.சுந்தரத்தேவன் (ஓய்வு) முன்னாள் தொழில்துறை செயலாளர் தலைமையில் பின்வரும் உறுப்பினர்களை உள்ளடக்கிய ஒரு குழுவை நேற்று அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதர உறுப்பினர்கள் கீழ்வருமாறு:

1. பேராசிரியர் வி.விஜயபாஸ்கர், பகுதி நேர உறுப்பினர் மாநில வளர்ச்சி கொள்கைக்குழு மற்றும் பேராசிரியர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்.

2. பிந்து ஆனந்த், இந்திய ரிசர்வ் வங்கியின் (பைனான்சியல் இன்குலிசன், எஸ்எம்இ) குழுக்களின் முன்னாள் உறுப்பினர்.

3. பாலசுப்ரமணியம், முன்னாள் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், இந்திய சிறுதொழில்கள் மேம்பாட்டு வங்கி.

4. ஹேமலதா அண்ணாமலை, முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி, ஆம்பியர் வெகிகல்ஸ் மற்றும் முன்னாள் தலைவர்.  

5. இஸ்ரார் அகமத், மண்டல தலைவர், இந்திய ஏற்றுமதி கழகங்கள் கூட்டமைப்பு.

6. அன்புராஜன், தலைவர், தமிழ்நாடு சிறு மற்றும் சிறிய தொழில்கள் சங்கம்.

7. ஆனந்த், முன்னாள் பங்குதாரர், எர்னஸ்ட் & யங் மற்றும் பட்டயக் கணக்காளர், இந்திய ரிசர்வ் வங்கி குழுவின் முன்னாள் உறுப்பினர்.

இந்த குழுவில் கீழ்க்காணும் அலுவலர்கள் அலுவல்சாரா உறுப்பினர்களாக இருப்பார்கள்.

8. செயலாளர், நிதித்துறை.

9.செயலாளர், தொழில்துறை,

10. செயலாளர், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை

11. தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் (உறுப்பினர் - செயலர்)

12. தலைவர், மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு

மேற்கண்ட குழு தமிழகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவற்றில் இருந்து நிறுவனங்களை மீட்டெடுப்பதற்கு தேவையான உடனடி, குறுகிய மற்றும் நீண்டகால நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான பரிந்துரைகளை வழங்கும். இக்குழு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தேவையான கடன் வசதி பெறவும் மற்றும் ஏற்றுமதியினை மேம்படுத்தவும் தேவையான ஆலோசனை வழங்கும். மேலும், இந்த குழு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு, வணிகம் புரிவதை எளிமையாக்குதல் மற்றும் மனித ஆற்றல் தொடர்பாக ஆராயும். மாநிலத்தின் பின்தங்கிய பகுதிகளில் தொழில் வளர்ச்சியை உயர்த்த ஆலோசனை வழங்கவும் இக்குழு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த குழு மூன்று மாதங்களுக்குள் அதன் அறிக்கையை அரசுக்கு அளிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>