தனியார் மருத்துவமனைகளில் சிஎஸ்ஆர் நிதியில் இலவச கோவிட் தடுப்பூசி முகாம் முதல்வர் துவக்கி வைத்தார்

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: காவேரி மருத்துவமனையில், இந்திய தொழிற் கூட்டமைப்பு மற்றும் தனியார் மருத்துவமனைகள் இணைந்து, தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கூட்டாண்மை சமூக பங்களிப்பு நிதியின்  மூலம் நடத்தும் இலவச கோவிட் தடுப்பூசி செலுத்தும் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். மேலும் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து முதல்வர் இலவச கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிக்கு இந்திய தொழிற் கூட்டமைப்பு தலைவர் டாக்டர் சந்திரகுமார், இந்திய தொழிற் கூட்டமைப்பின் கூட்டாண்மை சமூக பங்களிப்பு நிதியிலிருந்து 2 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், அடையாறு ஆனந்தபவன் சார்பில் அதன் நிர்வாக இயக்குநர் டாக்டர் கே.டி. சீனிவாச ராஜா ரூ.7 லட்சம் காசோலையும் வழங்கினார்.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டியதன் அவசியத்தை முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு பணிகளும் அரசின் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநிலத்தில் இதுவரை அரசு மற்றும் தனியார் தடுப்பூசி மையங்களின் மூலம் 2,15,17,446 பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் என்.எழிலன், த.வேலு, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி,  சுகாதார திட்ட இயக்குநர் உமா, சென்னை மாநகராட்சி துணை ஆணையர் மனீஷ், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வவிநாயகம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: