5 நாள் சுற்றுப்பயணமாக ஆகஸ்ட் 2ம் தேதி ஜனாதிபதி தமிழகம் வருகை

* பேரவை வளாகத்தில் மாலை 5 மணிக்கு கலைஞர் படத்தை திறந்து வைக்கிறார்

* நூற்றாண்டு விழாவிலும் பங்கேற்பு

சென்னை: ஐந்து நாள் சுற்றுப்பயணமாக, ஆகஸ்ட் 2ம் தேதி தமிழகம் வரும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அன்று மாலை தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்று, பேரவை வளாகத்தில் மறைந்த முதல்வர் கலைஞரின் உருவப்படத்தை திறந்து வைக்கிறார். அவரது வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 19ம் தேதி டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து பேசினார். அப்போது, சென்னை மாகாண மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கொண்டு, தனித்தன்மையோடு செயல்பட்ட சட்டப்பேரவை 12.1.1921 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.

அதை நினைவுப்படுத்தக்கூடிய வகையில் சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவை கொண்டாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. எனவே, ஜனாதிபதி, விழாவுக்கு தலைமை தாங்கி நடத்திட வேண்டும். சட்டப்பேரவையில் மறைந்த முதல்வர் கலைஞரின் உருவப்படத்தை திறந்து வைக்க வேண்டும் என்று குடியரசு தலைவரிடம் கோரிக்கை வைத்தார். அவர் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு, வரும் 2ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 5 நாள் பயணமாக தமிழகத்துக்கு வருகிறார். அவர் சுற்றுப்பயணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜனாதிபதி மாளிகை நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 2ம் தேதி ஜனாதிபதி, தனி விமானம் மூலம் காலை 9.50 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையத்துக்க பிற்பகல் 12.55 மணிக்கு வருகிறார்.

அங்கிருந்து கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு செல்கிறார். அங்கு மதிய உணவை முடித்துக் கொண்டு சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். மாலை 4.35 மணிக்கு கவர்னர் மாளிகையில் இருந்து புறப்பட்டு சட்டப்பேரவை விழாவில் பங்கேற்க வருகிறார். மாலை 5 மணிக்கு தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்கிறார். அப்போது, சட்டப்பேரவை வளாகத்தில் மறைந்த தமிழக முதல்வர் கலைஞரின் உருவப்படத்தை திறந்து வைத்து உரையாற்றுகிறார். இந்த விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் பிச்சாண்டி ஆகியோர் உரையாற்றுகின்றனர். விழாவில், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். பின்னர் நிகழ்ச்சியை முடித்து ஜனாதிபதி அன்று இரவு ராஜ்பவனில் தங்குகிறார்.

ஆகஸ்ட் 3ம் தேதி காலை 10.15 மணிக்கு, சென்னை விமானநிலையத்தில் இருந்து புறப்பட்டு சூலூர் விமானப்படை தளத்திற்கு காலை 11.40 மணிக்கு செல்கிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நீலகிரிக்கு சென்று, அங்கிருந்து கார் மூலம் ராஜ்பவன் செல்கிறார். அன்று முழுவதும் ராஜ்பவனில் தங்குகிறார். மறுநாள் காலை (4ம் தேதி) காலை 10.20 மணிக்கு வெல்லிங்டன் பாதுகாப்பு சேவை ஊழியர்கள் கல்லூரிக்கு சென்று பார்வையிட்டு உரையாடுகிறார். பின்னர் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ராஜ்பவன் திரும்புகிறார். 5ம் தேதி ராஜ்பவனில் ஓய்வெடுக்கிறார். 6ம் தேதி காலை காலை 10.30 மணிக்கு ராஜ்பவனில் இருந்து நீலகிரி வருகிறார். அங்கிருந்து காலை 10.50 மணிக்கு புறப்பட்டு விமானம் மூலம் 11.25 மணிக்கு சூலூர் விமான படை தளத்திற்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து பிற்பகல் 2.30 மணிக்கு தனிவிமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

ஜனாதிபதி வருகையையொட்டி, கடந்த சில நாட்களுக்கு முன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அதன்படி, 5 நாள் பயணமாக வரும் குடியரசு தலைவருக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தலைமையில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நகர் முழுவதும் வாகனச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஓட்டல்கள், லாட்ஜ்களிலும் சோதனை நடந்து வருகிறது. ரவுடிகள், பழைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதேபோல கோவை, ஊட்டியிலும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: