×

செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக ஓரணியில் திரளும் எதிர்க்கட்சிகள்: ராகுல் தலைமையில் 14 கட்சிகள் தொடர் ஆலோசனையால் பரபரப்பு

புதுடெல்லி: செல்போன் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் பெகாசஸ் உளவு மென்பொருள் குற்றச்சாட்டு தொடர்பாக, ஒன்றிய அரசு விவாதம் நடத்தியே தீர வேண்டுமென்பதில் உறுதியாக உள்ளன. இதுதொடர்பாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் திமுக உள்ளிட்ட 14 எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், ஒன்றிய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 300 பேரின் செல்போன் ஒட்டு கேட்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்த மென்பொருள் அரசுகள் மற்றும் அரசு அமைப்புகளுக்கு மட்டுமே விற்கப்படும். எனவே, ஒன்றிய அரசே இந்த மென்பொருளை வாங்கி, எதிர்க்கட்சி தலைவர்களை ரகசியமாக உளவு பார்த்துள்ளதா என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் சட்ட விரோதமாக எதுவும் நடக்கவில்லை என ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் பதில் கூறியது. ஆனால், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டுமெனவும், செல்போன் ஒட்டு கேட்டு விவகாரத்தில் நாட்டு மக்களுக்கு அரசு உண்மையை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டுமெனவும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.

ஒன்றிய அரசோ பெகாசஸ் விவகாரத்தில் விவாதம் நடத்த தயாராக இல்லை. எனவே, நாடாளுமன்றம் தொடர் அமளி காரணமாக முடங்கி வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிந்ததும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் 14 எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் திடீர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இதில், திமுக, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, இடதுசாரிகள், ஆம் ஆத்மி, தேசிய மாநாட்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட 14 கட்சி எம்பி.க்கள் பங்கேற்றனர். இதில், பெகாசஸ் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருந்து, நல்ல ஒத்துழைப்புடன் ஒன்றிய பாஜ அரசுக்கு அழுத்தம் கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, நேற்று காலை நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக ராகுல் காந்தி தலைமையில் மீண்டும் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடந்தது. இதில், நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான வியூகம் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், பெகாசஸ் செல்போன் ஒட்டுகேட்டு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்திற்கு பின் நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் அளித்த பேட்டியில் கூறியதாவது: பெகாசஸ் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் ஒரே நிலைப்பாட்டில் உள்ளன. விவாதம் நடக்கும் வரை நாங்கள் எங்கும் செல்ல மாட்டோம். நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்குவதாக ஒன்றிய அரசு கூறுவது தவறானது. நாங்கள் எங்கள் கடமையை தான் முழுமையாக செய்து வருகிறோம்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படுகிறது. நாங்கள் ஒரே ஒரு கேள்வி கேட்கிறோம். பெகாசஸ் உளவு மென்பொருளை இந்திய அரசு வாங்கியதா, இல்லையா? அந்த ஆயுதத்தை சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக பயன்படுத்தியதா? இல்லையா? இதைத்தான் நாங்கள் அறிய விரும்புகிறோம். இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் பிரதமரோ, உள்துறை அமைச்சரோ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஆனால், அவர்கள் மறுக்கின்றனர். இந்த விஷயத்தில் ஒன்றிய அரசு அஞ்சுவது ஏன்? பிரதமர் மோடியும், அமித்ஷாவும் இந்திய ஜனநாயகத்தின் ஆன்மாவை காயப்படுத்தி விட்டனர்.

இந்த விவகாரத்தில் இப்போது விவாதம் நடத்தாமல் விட்டால் அப்படியே மூடி மறைத்து விடுவார்கள். எனவே, பெகாசஸ் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நேரடி பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு ராகுல் கூறினார். பெகாசஸ் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டிருப்பது ஒன்றிய அரசுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், அடுத்தடுத்த நாட்களிலும் நாடாளுமன்றத்தில் பெகாசஸ் விவகாரம் கடும் அமளியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாய தோற்றத்தை உருவாக்கும் அரசு
ராகுல் காந்தியுடன் திமுக நாடாளுமன்ற கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு அளித்த பேட்டியில், ‘‘நாடாளுமன்றத்தை தினமும் எதிர்க்கட்சிகள் முடக்குவதாக ஒன்றிய அரசு மாய தோற்றத்தை உருவாக்குகிறது. உண்மையிலேயே, இந்த விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டுமென நாங்கள் தினமும் முறையாக நோட்டீஸ் தருகிறோம். ஆனால், அதை அரசு நிராகரிக்கிறது. இது ஜனநாயகத்தின் மீதான மிகப்பெரிய கவலை,’’ என்றார்.

ஏதோ நடந்திருக்கிறது
ராகுல் தனது பேட்டியில் மேலும், ‘‘இந்த ஒட்டு கேட்பு விவகாரம் வெறும் தனிநபர் சுதந்திரம் சார்ந்த விஷயமல்ல. தேச பாதுகாப்புடன் சம்மந்தப்பட்டது, தேசத் துரோகம் நடந்துள்ளது. என்னைப் பொறுத்த வரையில் இது தேசத்திற்கு எதிரான வேலையாகும். தீவிரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்தும் ஆயுதமான பெகாசசை பிரதமர் மோடி, சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக பயன்படுத்தி உள்ளார். இந்த நாட்டுக்கு எதிராக பெகாசஸ் எனும் ஆயுதம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த விஷயத்தில் விவாதம் நடத்த அரசு மறுக்கிறது. அப்படியெனில் அரசு ஏதோ தவறாக, நாட்டிற்கு அச்சுறுத்தலான விஷயத்தை செய்துள்ளது,’’ என்றார்.

Tags : United States ,Rahul , Cellphone Eavesdropping Issue, Union Government, Opposition, Rahul Leadership
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்