கொளத்தூர் தொகுதியில் பல்வேறு திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்  ரூ.65 லட்சம் மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை மாநகராட்சியின், திரு.வி.க. நகர் மண்டலம், கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோபாலபுரம் சென்னை நடுநிலைப் பள்ளியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.17.37 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட  ஸ்மார்ட்  வகுப்பறை கட்டிடம், திரு.வி.க. நகர் பிரதான சாலையில் ரூ.28.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையங்கள்,  பல்லவன் சாலையில் ரூ.19.41 லட்சம் மதிப்பீட்டில் நீத்தார் நினைவுக் கூடம் என மொத்தம் 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.

தொடர்ந்து, டான் பாஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி சார்பில் 360 மகளிருக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினார். கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில்,  அனிதா அச்சீவர்ஸ் அகாடமி சார்பில் 223 மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி பெறுவதற்கான ஆணைகளையும், பள்ளிக் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு புத்தகப் பைகள், நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் மற்றும் மடிக்கணினிகள், பொதுமக்களுக்கு நான்கு சக்கர தள்ளு வண்டிகள், மீன்பாடி வண்டிகள், மாவு அரவை இயந்திரங்கள், மூன்று சக்கர மோட்டார் வாகனங்கள், மருத்துவம் மற்றும் திருமண உதவிகள் ஆகிய நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கி, அங்கு அமைக்கப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசி மையத்தையும் பார்வையிட்டார்.

மேலும், பூம்புகார் நகர், 1வது பிரதான சாலையில் அரசு மகளிர் கல்லூரி அமையவிருக்கும் இடத்தையும், வீனஸ் நகர் 5வது குறுக்கு தெருவில் ரூ.7.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர் ஆண்கள் விடுதிக் கட்டிடப் பணியினையும், கணேஷ் நகரில் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தால் நிறுவப்படவுள்ள நீரேற்று நிலையத்தையும், அப்பகுதியில் துணை மின்நிலையம் அமைக்கப்படவுள்ள இடத்தையும் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப்சிங் பேடி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயராணி, துணை ஆணையர் (சுகாதாரம்) மனீஷ், துணை ஆணையாளர் (கல்வி) சினேகா, மத்திய வட்டார துணை ஆணையாளர் ஷரண்யா அரி, அனிதா அச்சீவர்ஸ் அகாடமி முதன்மை செயல் அலுவலர் நரேந்திரன், முதன்மை இயக்க அலுவலர் ஹெலன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்  ரூ.65 லட்சம் மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Related Stories: