ஆதிதிராவிடர்களுக்கு வழங்கிய இலவச பட்டாவை ரத்து செய்யக்கோரி கிராம மக்கள் சாலையில் அமர்ந்து சமையல் செய்யும் போராட்டம்: ஆர்.கே.பேட்டை அருகே பரபரப்பு

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அருகே ஆதிதிராவிடர்களுக்கு வழங்கிய இலவச வீட்டு மனை பட்டாவை ரத்து செய்யக்கோரி கிராம மக்கள் திடீர் சாலையை மறித்து, சமையல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அடுத்த ராஜாநகரம் மேற்கு கிராமத்தில், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிட நலத்துறை சார்பில், அதே பகுதியில் வசித்து வரும் ஆதிதிராவிடர்கள் 100 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. ஆதிதிராவிடர்களுக்கு தமிழக அரசு வழங்கிய இலவச வீட்டு மனை பட்டா சர்வே செய்து பயனாளிகளுக்கு வழங்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் கடந்த 25 ஆண்டுகளாக இலவச வீட்டுமனை பெற்றவர்கள் வீடு கட்டி குடியேற முடியாத நிலையில் அவதிப்பட்டு வந்தனர்.  

ஆதிதிராவிடர்கள் சார்பில், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்து தமிழக அரசு ஆதிதிராவிடர்களுக்கு உடனடியாக சர்வே செய்து வீடு கட்டிக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனை அடுத்து வருவாய்த்துறையினர் சர்வே பணியில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்நிலையில், ராஜாநகரம் மேற்கு கிராமத்தை சேர்ந்த பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு பள்ளிப்பட்டு - சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு சாலைக்கு நடுவில் சமையல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரே நேரத்தில் கிராம மக்கள் அனைவரும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு மற்றும் பதற்றம் நிலவியது. இதனை அடுத்து திருத்தணி டி.எஸ்.பி.ரவிச்சந்திரன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த, திருத்தணி கோட்டாட்சியர் சத்யா, பொதுமக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, இலவச வீட்டு மனைகள் விவகாரத்தில் தற்போதைய நிலைமையே தொடரும் என்று உறுதியளித்தார். பொதுமக்கள், அவரது உறுதி ஏற்று சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் கைவிட்டு கலைந்து சென்றனர். அதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>