செங்குன்றம் அருகே பரபரப்பு பிரபல ரவுடி வெட்டி படுகொலை: 2 பேர் போலீசில் சரண்

புழல்: செங்குன்றம் அடுத்த நல்லூர் சுங்கச்சாவடி அருகே, வாலிபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இக்கொலை தொடர்பாக, நேற்று மதியம் 2 பேர் போலீசில் சரணடைந்தனர்.  இது குறித்து,  வழக்கு பதிவு செய்த சோழவரம் போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செங்குன்றம் அடுத்த நல்லூர் சுங்கச்சாவடி அருகே உள்ள முட்புதரில் வாலிபர் சடலம் கிடப்பதாக சோழவரம் போலீசாருக்கு நேற்று காலை ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சோழவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது, 26 வயது மதிக்கதக்க வாலிபர் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து, தகவலறிந்த திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளர் வருண்குமார், பொன்னேரி டிஎஸ்பி கல்பனா தத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், படுகொலை செய்யப்பட்டவர் செங்குன்றம் அடுத்த ஜோதி நகரை சேர்ந்த பிரபல ரவுடி சண்முகப்பாண்டியன்(26) என்பதும், இவர்மீது, செங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கஞ்சா கடத்தல், அடிதடி போன்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும், இது தொடர்பாக, பலமுறை சிறைக்கு இவர் சென்று வந்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து, போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத ப‌ரிசோதனை‌க்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ நடைபெற்ற  இடத்தில் காணப்பட்ட 4 வீச்சு அரிவாள், 1 செல்போன் ஆகியவற்றை போலீசார் மீட்டனர். பின்னர், துப்பு துலக்குவதற்காக மோப்ப நாய் நிக்கி வரவழைக்கப்பட்டது. சிறிது தூரம் ஓடிச்சென்ற மோப்ப நாய் அங்கேயே நின்று விட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, வழக்கு பதிவு செய்த சோழவரம் போலீசார், கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில், செங்குன்றம் நாரவாரிகுப்பம் பகுதியை சேர்ந்த மணிகண்டன்(26), பொத்தூர் பகுதியை சேர்ந்த வேலு என்கிற முருகன்(26) ஆகியோர் சோழவரம் காவல் நிலையத்தில் நேற்று மதியம் சரண் அடைந்தனர். இதனையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், முன்விரோதம் காரணமாக, சண்முகப்பாண்டியன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது  கஞ்சா கடத்துவது தொடர்பாக ஏற்பட்ட மோதலால் கொல்லப்பட்டாரா? எனப் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இந்த கொலை சம்பந்தமாக மேலும் சிலரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Related Stories: